BAN vs NZ | மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து

By செய்திப்பிரிவு

மிர்பூர்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

மிர்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது 66.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. டாம் லேதம் 4, ஹென்றி நிக்கோல்ஸ் 1, டேவன் கான்வே 11, டாம் பிளண்டல் 0, கேன் வில்லியம்சன் 13 ரன்னில் வெளியேறினர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 12.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 12, கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்களையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்ள நியூஸிலாந்து அணி ஆயத்தமாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE