8 விக்கெட்கள் வீழ்த்தி அர்பித் குலேரியா சாதனை

By செய்திப்பிரிவு

சண்டிகர்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இமாச்சல்பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத்–இமாச்சல்பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 49 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 93 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 116 ரன்களும் பிரியங்க் பன்சால் 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்களும் விளாசினர். ஷிராக் காந்தி 42, ஹேமங்க் பட்டேல் 35 ரன்கள் சேர்த்தனர்.

இமாச்சல் பிரதேசம் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 9 ஓவர்களை வீசி 50 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் 26 வயதான அர்பித் குலேரியா. இதற்கு முன்னர் ஷாபாஸ் நதீம், ராகுல் சங்வி ஆகியோரும் 8 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தனர். உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய 15-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அர்பித் குலேரியா.

328 ரன்கள் இலக்கை துரத்திய இமாச்சல் பிரதேசம் அணியானது 49.5 ஓவர்களில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பிரசாந்த் சோப்ரா 96, சுமீத் வர்மா 82 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ஹேமங்க் பட்டேல் 3 விக்கெட்களையும் ஜெய்வீ பர்மார், சித்தார்த் தேசாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE