“எனது மகனுக்கு முன் உதாரணமாக கோலியை கூறுவேன்” - லாரா புகழாரம்

By செய்திப்பிரிவு

பார்படோஸ்: எனது மகனுக்கு முன் உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியைத்தான் கூறுவேன் என்று மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி 765 ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தார்.

மேலும், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்தஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை விராட் கோலி முறியடித்திருந்தார். தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் (50 சதங்கள்) உள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார் விராட் கோலி.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரையன் லாரா, விராட் கோலி குறித்து கூறியதாவது:

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவரை இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி போன்று விளையாட வேண்டும் என்று கூறுவேன். எனது மகனுக்கு முன் உதாரணமாக விராட் கோலியைத்தான் நான் நிறுத்துவேன்.

விராட் கோலியின் அர்ப்பணிப்பையும் வலிமை மட்டும் இல்லாமல், நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் எனது மகனுக்கு அறிவுறுத்துவேன்.

இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் கோலியின் ஆட்டம் சிறப்பானது அல்ல என்று பலரும் கூறி வருகின்றனர். சிலர் தனிப்பட்ட சாதனைகளுக்காக விராட் கோலி விளையாடுகிறார் என்றும் கூறுவார்கள். குழு விளையாட்டு என்பது அணி வெற்றி பெறுவதைப் பற்றியதாகும். அதுவே முதல் இலக்காக இருக்க வேண்டும். அடுத்தது துணை இலக்காக ஒரு வீரர் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறுவது என்ற விஷயம்.

இதைத்தான் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முழுவதும் விராட் கோலி இந்திய அணிக்காக செய்து கொடுத்தார். விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய உண்மையான மரபுதான். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தையும் அதன் முகத்தையும் அவர் மாற்றி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

மேலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களையும், ஒருநாள்போட்டியில் 10,405 ரன்களையும் குவித்துள்ளார் லாரா. பிரையன் லாராஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் என்ற பொறுப்பில் தற்போது இருந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE