நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | ஷான்டோ அபார சதம்: 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 212 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

சில்ஹெட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 3-ம்நாள் ஆட்டத்தை நேற்று கைல்ஜேமிசன் 7, டிம் சவுத்தி ஒரு ரன்னுடன் ஆட்டத்தைத் தொடங்கினர்.

கைல் ஜேமிசன் 23 ரன்கள் எடுத்தநிலையில் மோமினுல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டிம் சவுத்தி, 35 ரன்கள் எடுத்திருந்தபோது மோமினுல் பந்தில் போல்டானார். அஜாஸ் படேல் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 101.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி தரப்பில் நயீம் ஹசன் 4 விக்கெட்களும், மோமினுல் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். ஷோரிபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் வங்கதேசத்தை விட முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து வங்கதேசம் தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மஹமதுல் ஹசன் ஜா 8 ரன்களும், ஜாகிர் ஹசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் ஷான்டேவு்ம், மோமினுல் ஹக்கும்சிறப்பாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர்.

அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருந்தபோது மோமினுல் ஹக் ஆட்டமிழந்தார். அவர் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட்டானார்.

முஷ்பிகுர் ரஹிம் அபாரம்: இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைனுடன் ஜோடி சேர்ந்த அனுபவ ஆட்டக்காரர் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக விளையாடினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹொசைன்ஷான்டோ சதமடித்தார். ஆட்ட நேர இறுதியில் ஷான்டோ 104 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE