நம்பிக்கை அளிக்கக்கூடியதா இந்திய வேகப்பந்து வீச்சு?

By பெ.மாரிமுத்து

புத்தாண்டை கடினமான சவால்களுடன் எதிர்கொள்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடங்கும் இந்த சவாலானது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக வேகங்களுக்கு உரித்தான ஆடுகளங்களில் அடுத்த 18 மாதங்களுக்கு இந்திய அணிக்கு காத்திருக்கிறது.

கடந்த சுற்றுப்பயணங்களில் இந்திய அணிக்கு தோனி தலைமை வகித்திருந்தார். அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் 13 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. விதிவிலக்காக லார்ட்ஸ், டர்பன் டெஸ்ட் போட்டியில் மட்டும் பந்து வீச்சாளர்கள் உதவியுடன் வெற்றி வசப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் தோனி கேப்டன்சியில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கப் பொறாமல் போனது தான் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்திருக்க முடியும்.

ஏனெனில் அயல்நாட்டு சுற்றுப்பயணங்களில் வேகப்பந்து வீச்சுதான் ஆட்டத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்கும். ஆனால் தோனியோ, உதவியற்ற பந்து வீச்சாளர்களால், பேட்ஸ்மேன்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அதிலும் போட்டியை நடத்தும் அணிகளின் வேகப்பந்து வீச்சு ஆதிக்கத்துக்கு எதிராக நமது பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ரன் சேர்த்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில். ஆனால் அதேவேளையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களோ எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் எளிதாக ரன்களை சேர்க்க அனுமதித்தனர்.

தோனியின் காலக்கட்டத்தில் 2010-11ம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் மட்டுமே இந்திய அணி ஒரு முழுமையான பந்து வீச்சை அரிதான வகையில் வெளிப்படுத்தியது. இது ஒரு வெகுமதி தான். இதன் விளைவாகவே அந்த போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அடுத்தது 2014-ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட 95 ரன்கள் வித்தியாசத்திலான பிரமிக்கத்தகுந்த வெற்றி.

319 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய போது இஷாந்த் சர்மாவுக்கு எந்த இடத்தில், எப்படி பந்து வீச வேண்டும் என சரியான திட்டமிடுதலை அமைத்துக் கொடுத்தார் தோனி. அவரது கட்டளைப்படியே நேர்த்தியாக வீசிய இஷாந்த் சர்மா 7 விக்கெட்களை வேட்டையாடி அணியின் வெற்றியில் பெரும் பங்களிப்பை செய்திருந்தார். நீண்ட வடிவிலான ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருங்கிணைந்து நல்ல ஓவர்களை எப்போதுதான் வீசுவார்கள் என ஆண்டு கணக்கில் தோனி காத்திருந்ததுதான் மிச்சம். அப்படியே ஒரு பந்து வீச்சு கலவையை தோனி தயார் செய்தாலும் அவர்கள் விரைவில் காயம் அடைவதும் தொடர்கதையானது.

2011-12ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஜாகீர்கான் ஓரளவு சிறப்பாக வீசினார். அந்த தொடரில் அவர் 6 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்கள் கைப்பற்றினார். எனினும் அந்தத் தொடர் இந்தியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்தது. ஏனெனில் இந்திய அணி 4-0 என ஓயிட்வாஷ் பெற்றது. 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் கடுமையாக தோல்வியடைந்த நிலையில் 3-வது ஆட்டம் டிராவில் முடிவடைந்ததும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே விடை பெற்றார் தோனி.

கடைசி டெஸ்ட்டில் விராட் கோலி பொறுப்பேற்ற நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இந்தத் தொடரிலும் இந்திய அணி பந்து வீச்சு படுமோசமாகவே அமைந்தது. தட்டையான ஆடுகளங்களில் கூட சுழற்பந்து வீச்சாளர்கள் உதவவில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய பந்து வீச்சு சிதைவுக்கு உள்ளானது. பந்தின் தையல்களை பிடித்து (seam position) சிறப்பாக வீசும் திறன் கொண்ட முகமது ஷமி, தளர்வான பந்துகளை வீசி ஒவ்வொரு ஓவருக்கும் சரியாக 4.24 ரன்ளை வழங்கினார்.

அதேவேளையில் புவனேஷ்வர் குமார், தளர்வான பந்துகளை வீசவில்லை. ஆனால் அவரது வேகத்தில் தீவிரம் குறைந்து காணப்பட்டது. மறுபுறம் இஷாந்த் சர்மா சீராக வீசினார். தனிப்பட்ட முறையில் அவரது திறன் சிறப்பாக வெளிப்பட்டது. ஓவருக்கு சராசரியாக 3.47 ரன்கள் வழங்கியிருந்தார். உமேஷ் யாதவிடம் சிறந்த வேகம் இருந்தது ஆனால் விக்கெட்கள் வேட்டையாடும் அளவிற்கான விவேகம் இல்லை. அவர், ஓவருக்கு சராசரியாக 4.62 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

கடந்த 7 வருட காலத்தில் அயல் நாட்டு மண்ணில் இந்திய பந்து வீச்சின் நிலைமை இதுதான். இப்படியிருக்கும் போது இம்முறை மட்டும் இந்திய அணி எந்த வகையில் நம்பிக்கையுடன் செல்கிறது?. அதிலும் அதே வகையான பந்து வீச்சாளர்கள் குழுவுடன். இதுதொடர்பான கேள்விக்கு இணையதளம் ஒன்றுக்கு விராட் கோலி பதிலளிக்கையில், “இந்திய பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சிறப்பாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசல்வுட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அறிமுக தொடரிலேயே அவர், மெக்ராத்துடன் ஒப்பிடும் வகையில் பேசப்பட்டார். அதற்கான அடையாளங்களை அவர், வெளிப்படுத்தியிருந்தார். இந்திய பந்து வீச்சாளர்கள் நிச்சயம் மோசமான பந்துகளை வீச வேண்டும் என்ற குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுவதில்லை. அதேவேளையில் பேட்ஸ்மேனின் கால்களை குறிவைத்து தாக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணங்களையும் கொண்டிருக்க வில்லை” என்றார்.

இந்திய பந்து வீச்சு துறையில் உடற்தகுதிதான் காணாமல் போன ஒரு இணைப்பாக பார்க்கப்படுகிறது. இதை சரிசெய்வதற்கான பணிகள் சமீபகாலமாக முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரத்யேகமான பயிற்சியாளர்களை கொண்டு பந்து வீச்சாளர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முழுமையாக அணியை வழிநடத்த உள்ளதால் அதற்கு தகுந்த வகையில் பந்து வீச்சு துறையை விராட் கோலி தயார் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்திய அணி தொடர்ச்சியான உள்நாட்டு தொடர்களை சந்தித்த பிறகே அயல்நாட்டு மண்ணில் விளையாடும் சுழற்சி அட்டவணையை கொண்டுள்ளது. கடந்த 2012-13ம் ஆண்டு உள்நாட்டு சீசனில் கிட்டத்தட்ட பெரிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலை இருந்தது. மேலும் அடுத்ததாக மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் எந்த வகையிலான தாக்குதல் பந்து வீச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவான திட்டமிடலும் இல்லாமல் இருந்தது. மேலும் இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் அதிக அளவிலான வேகப்பந்து வீச்சாளர்களும் விளையாடவில்லை. இதனால் அயல் நாட்டு மண்ணில் தங்களது பணி என்னவென்பதை கூட வேகப்பந்து வீச்சாளர்கள் அறியாமல் இருந்த கதையும் உண்டு. வெளிநாட்டு ஆடுகளங்களில் அதிக ஓவர்களை வீசியவர் இஷாந்த் சர்மா மட்டும்தான். அவர் 169 ஓவர்களை வீசி உள்ளார். இதே காலக்கட்டத்தில் அவரை விட 4 மடங்குகள் குறைவாக வீசியவர் தான் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.

இம்முறை மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மண்ணில் நடைபெற்ற தொடர்கள் மற்றும் உள்நாட்டு சீசனில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் பகுதியாக உணரப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் சில நேரங்களில் வேகப் பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உமேஷ் யாதவ் 617 ஓவர்கள் வீசினார். இது அஸ்வின் வீசியதில் 45 சதவீதம் ஆகும். அஸ்வின் 1,449 ஓவர்களை வீசியிருந்தார். அதேவேளையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமியும் மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லை. ஒவ்வொரு முறையும் ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் போது புவனேஷ்வர் குமாரும் அணியிடம் இடம்பெறத் தவறவில்லை.

தற்போதைய அணியில் தெளிவான திட்டம் உள்ளது. அதே பந்து வீச்சு குழுதான், ஆனால் அவர்கள் சிறந்த உடற்தகுதியுடன் அனுபவத்தையும் கொண்டுள்ளனர் என்பதுதான் சிறப்பம்சம். தோனி தனது அணியை குறிப்பிட்ட அளவு முதிர்ச்சியுடன் வழிநடத்தினார். ஆனால் விராட் கோலியோ, வீரர்களின் தனிப்பட்ட பொறுப்பை உணர்ந்து செயல்படும் வகையில் தான் விரும்பியவாறு அணியை வடிவமைத்துள்ளார்.

முகமது ஷமி தனது பந்து வீச்சை மேம்படுத்தி உள்ளார். முக்கியமாக அவர் ஓடிவரும் விதத்தில் உள்ள பிரச்சினைகளை களைந்துள்ளார். ஆனால் நீண்ட காலத் தொடரில் உடற்தகுதி பிரச்சினையை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் கேள்வியாக முன்னெழுகிறது. ஏனெனில் சமீபகாலமாக அவர், ஒரு ஆட்டத்தில் பங்கேற்றால் அடுத்த ஆட்டத்தில் உடற்தகுதியால் வெளியே அமரும் நிலை இருந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் இருவார காலத்தில் நடத்தப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. பிரதான டெஸ்ட் பந்து வீச்சாளர்களுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பும்ரா மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2010-11ம் ஆண்டு நடைபெற்றதொடரில் ஸ்ரீசாந்த் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த செயல்பாட்டின் இணைப்பை உணர்ந்தாலே போதும். புதிய பந்தில், பந்தின் தையல் பகுதியை பயன்படுத்தி சரியான நகர்வுகளை கொடுக்க வேண்டும். மேலும், சீரற்ற பவுன்ஸ்களையும் வீசவேண்டும். அதே வேளையில் பழைய பந்தில் உலர்ந்த ஆடுகளத்துக்கு தகுந்தபடி பந்து வீச்சை அமைக்க வேண்டும். இவை இரண்டும் தான் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த பிரதானமான யுக்திகளாக இருக்கும்.

மேலும் சோர்வடையாமல் நீண்டநேரம் பந்து வீசும் திறனும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று. விக்கெட்கள் வீழ்த்த முடியாத சமயங்களில் எதிரணியை ரன்கள் சேர்க்க விடாமல் ஒரு வகையில் அழுத்தம் கொடுப்பதும் அவசியம். இதனை இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செய்யும் நமது பந்து வீச்சாளர்கள் அயல்நாட்டு மண்ணில் செய்ய தவறுகின்றனர். மேலும் பின்கள வீரர்களையும் நீண்ட நேரம் பேட் செய்ய அனுமதிக்காத வகையிலும் திட்டம் வகுக்க வேண்டும்.ஏனெனில் முந்தைய சுற்றுப்பயணங்களில் இந்த விஷயத்தில் இந்திய கவனம் செலுத்த தவறியுள்ளது. பின்கள வீரர்களின் உதவியால் எதிரணியினர் 100 முதல் 150 ரன்கள் வரை சேர்த்தால் கூட ஆட்டம் நம் கைகளில் இருந்து விலகிச் சென்று விடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்