“தனியார் லீகுகளை விட நாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பீர்” - பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹபீஸ் அறிவுரை

By ஆர்.முத்துக்குமார்

கராச்சி: பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் லீகுகளுக்கான முக்கியத்துவம் இரண்டாம்பட்சம்தான்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நிராகரித்தார் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப். இவரது இந்த முடிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதே முகமது ஹபீஸ் இவ்வாறு கூறக் காரணமாக அமைந்தது.

ஒயிட்-பால் ஸ்பெஷலிஸ்ட் ரவுஃப், தனது வாழ்க்கையில் ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் ஒன்பது முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கான வாய்ப்பை நிராகரித்தார். அங்கு பாகிஸ்தான் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் பாகிஸ்தான் அணிக்கு ஆடுவதை விடுத்து ஹாரிஸ் ராவுஃப் பிக்பாஷ் லீக் டி20-யில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சம்மதத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

இந்நிலையில், முகமது ஹபீஸ் மேலும் கூறியது: "அனைத்து மத்திய ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டு ஒப்பந்த வீரர்கள் அனைவரும், பாகிஸ்தானுக்கு ஆடுவதை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். 20-25 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதன் நோக்கம், அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதை உறுதி செய்வதற்கே தவிர, அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு தனியார் கிரிக்கெட் கிளப்புகளுக்கு ஆடுவதற்காக அல்ல.

இப்போதெல்லாம் வீரர்கள் தனியார் லீகுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது பெருகி வருகிறது. இதனை ஆசியக் கோப்பையிலும் பார்த்தோம், உலகக் கோப்பையிலும் பார்த்தோம். இதனால் பணிச்சுமை, களைப்பு, காயங்களில் வீரர்கள் சிக்குகின்றனர். இப்போது டி20 உலகக் கோப்பை நோக்கி திட்டமிட வேண்டியிருப்பதால் வீரர்கள் தனியார் லீகுகளில் ஆடக் கேட்கும் தடையில்லாச் சான்றிதழ் இனி பாகிஸ்தான் அணியின் தேவைகளைப் பொறுத்தே பரிசீலிக்கப்படும்.

பாகிஸ்தான் அணிக்கு ஃபிட்டான வீரர்கள் தேவை என்றால், அவர்களின் பணிச்சுமையை நாங்கள் மேலாண்மை செய்யப் போகிறோம். வீரர்களின் அதிகபட்ச ஆற்றல் பாகிஸ்தான் அணிக்குத்தான் பயன்பட வேண்டும். அதற்காக லீகுகளில் விளையாடாதீர்கள் என்று சொல்லவில்லை, வாய்ப்பிருந்தால் நிச்சயம் அதுவும் பரிசீலிக்கப்படவே செய்யும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE