டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது நமீபியா

By செய்திப்பிரிவு

துபாய்: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30-ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் நேரடியாகவும், 2022-ம் டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இவற்றுடன் 2022-ம் ஆண்டு நவம்பர் 14 தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளும் என 12 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீதம் உள்ள 8 அணிகள் தகுதி சுற்று வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன் ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. இந்த வரிசையில் தற்போது நமீபியா இணைந்துள்ளது.

ஆப்பிரிக்க பிராந்திய தகுதி சுற்றில் நமீபியா அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் தான்சானியாவை தோற்கடித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நமீபியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 158 ரன்கள் இலக்கை துரத்திய தான்சானியா அணியால் 6 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியால் 10 புள்ளிகள் மற்றும் 2.643 நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் தகுதி சுற்றை நிறைவு செய்வதை நமீபியா உறுதி செய்துள்ளது. இதனால் அந்த அணி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. நமீபியா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (30-ம் தேதி) நைஜீரியாவுடன் மோதுகிறது.

உலகக் கோப்பை தொடரில் நமீபியா விளையாட உள்ளது இது 3-வது முறையாகும். ஆப்பிரிக்க பிராந்திய தகுதி சுற்றில் கடைசி அணியாக டி 20 உலகக் கோப்பை தொடருக்குள் நுழைவதற்கு உகாண்டா, கென்யா, ஜிம்பாப்வே, நைஜீரியா ஆகிய 4 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதில் ஜிம்பாப்வே, நைஜீரியா அணிகளைவிட உகாண்டா, கென்யா அணிகள் சிறந்த ரன் ரேட்டை வைத்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE