குஜராத் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்? 

By செய்திப்பிரிவு

மும்பை: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றால், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அணியின் முதல் ஐபிஎல் தொடரிலேயே (2022) குஜராத் அணி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.

இந்த சூழலில், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். அதன்படி வீரர்களை தங்களது அணியில் வைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

அந்த வகையில், 72 மணிநேர தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று (நவ.26) ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணி தக்கவைத்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைக்கு ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வரும் 19ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால், டிரேடிங் அடிப்படையில் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த கெடுவுக்குள் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி விடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பாண்டியாவின் தற்போதைய ஏலத்தொகையான ரூ.15 கோடியை விட அதிக தொகையை கொடுத்து அவரை எடுக்க மும்பை அணி தயாராக இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஒருவேளை ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு திரும்பினால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE