திருவனந்தபுரம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கக்கூடும்.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரது அதிரடியால் எளிதாக வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்திய அணி சற்று தடுமாற்றம் அடைந்தது. எனினும் ரிங்கு சிங் பதற்றம் இல்லாமல் விளையாடி அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சில் முகேஷ் குமார் 4 ஓவர்களை வீசி 30 ரன்களையும், சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல் 32 ரன்களையும் வழங்கினர். இவர்களை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் ரன்களை தாரை வார்த்தனர். அர்ஷ்தீப் சிங் 41 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 50 ரன்களையும். ரவி பிஷ்னோய் 54 ரன்களையும் வாரி வழங்கினார்கள்.
இன்றைய ஆட்டத்தில் இவர்கள், தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு செயல்பட முயற்சிக்கக்கூடும். விசாகப்பட்டினம் போட்டியில் முகேஷ் குமார் விக்கெட் கைப்பற்றாத போதிலும் யார்க்கர்கள், பவுன்சர்கள், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே என கலவையாக வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தனது பந்து வீச்சில் ரன் குவிப்பதை கட்டுப்படுத்தினார். இந்த பார்முலாவை அணியில் உள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் பின்பற்றினால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
சுழலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவி பிஷ்னோய், முதல் ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார். அந்த ஆட்டத்தில் அவரது பந்து வீச்சை ஜோஷ் இங்கிலிஸ் கடுமையாக பதம் பார்த்தார். ‘கூக்ளி’ பந்துகளை மட்டுமே அவர், நம்பி இருப்பது பலவீனமாக உள்ளது. இதனால் ரவி பிஷ்னோய் இன்றைய ஆட்டத்தில் தனது பந்து வீச்சு உத்திகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். முதல் ஆட்டத்தில் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, அக்சர் படேல் ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் பேட்டிங்கின் பலம் மேலும் அதிகரிக்கும்.
விசாகப்பட்டினத்தில் இஷான் கிஷன் தொடக்கத்தில் 19 பந்துகளுக்கு 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இடது கை பேட்ஸ்மேனான அவர், களத்தில் நிலைபெற்று அதன் பின்னரே மட்டையை சுழற்றினார். இந்த வகையில் அடுத்த 20 பந்துகளில் அவர், 37 ரன்கள் சேர்த்து இலக்கை வெற்றிகரமாக துரத்துவதற்கு உதவியிருந்தார். இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடுவதில் இஷான் கிஷன் கவனம் செலுத்தக்கூடும்.
ஆஸ்திரேலிய அணியானது முதல் ஆட்டத்தில் முன்னணி வீரர்களான டிராவிஸ் ஹெட்,கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இல்லாத நிலையிலும் பேட்டிங்கில் 208 ரன்களை விளாசி மிரளச் செய்தது. 50 பந்துகளில் 110 ரன்கள் விளாசிய ஜோஷ் இங்கிலிஸிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் களமிறங்கும் பட்சத்தில் மேத்யூ ஷார்ட் நீக்கப்படக்கூடும். அதேபோன்று ஆரோன் ஹார்டிக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல் இடம் பெற வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக தன்விர் சங்காவுக்கு பதிலாக ஆடம் ஸம்பா களமிறங்கக்கூடும்.
கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இதுவரை.. திருவனந்தபுரத்தில் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இதுவரை இந்திய அணி மூன்று சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 2017-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
அந்த ஆட்டத்தில் 171 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கு இந்தியத் தீவுகள் 9 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. கடைசியாக 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 107 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 110 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. தற்போது 4-வது முறையாக இந்திய அணி கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் டி 20 போட்டியில் விளையாட உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago