கேப்டனாக அணிக்கு பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி: சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு பந்தை மீதும் வைத்து 19.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 0, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியது. இஷான் கிஷன் 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 112 ரன்கள் குவித்தது. இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 14 பந்துகளில் விளாசிய 22 ரன்களும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெறும் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்த சூர்யகுமார் யாதவ், தனது விருப்பமான டி20 வடிவில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விசாகப்பட்டினம் போட்டிக்கு பின்னர் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:

களத்தில் இஷான் கிஷன் மிகவும் உதவினார். பயமின்றி போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எந்த ஓர் அச்சமுமின்றி விளையாடினேன். நான் அச்சமின்றி விளையாடுவதற்கு மறுமுனையில் இஷான் கிஷன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ரிங்கு சிங், அழுத்தமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக செயல்படக்கூடியவர். அவர், பேட்டிங் செய்ய களத்துக்குள் வந்த போதும் நிதானம் காட்டினார். இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த போது ஓய்வறையில் சிறிய பதற்றம் இருந்தது.ஆனாலும் அனைத்து வீரர்களும் உற்சாகமாக இருந்தனர். அவர்கள்போர்டில் ஸ்கோரைப் பார்த்தபோது, ஒரு விஷயத்தை மட்டுமேசொன்னார்கள், 'இந்த விளையாட்டை வென்றால் அது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும்'.என்றனர். அணியை வழிநடத்தியது பெருமையாக உள்ளது. கேப்டனாக முதல் போட்டியிலேயே அணிக்கு பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE