டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி - பாகிஸ்தானுக்கு செல்ல சுமித் நாகல், சசிகுமார் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளுக்காக பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய டென்னிஸ் வீரர்கள் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான அடுத்த சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய டென்னிஸ் வீரர்கள் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் அவர்கள் தகவலைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அகில இந்திய டென்னிஸ் சங்கம், தனது அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது.

சுமித் நாகல், உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 141-வது இடத்திலும், சசிகுமார் முகுந்த் 477-வது இடத்திலும் உள்ளன. இருவரும் பாகிஸ்தானுக்குச் சென்று டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு சரியான காரணங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தானில் உள்ள டென்னிஸ் ஆடுகளங்கள் புல் தரையாக இருப்பதால், தான் அங்கு விளையாட விரும்பவில்லை என்று சுமித் நாகல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக சசிகுமார் முகுந்த் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டேவிஸ் கோப்பை போட்டியில் ராம்குமார் ராமநாதன் தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் என்று தெரிகிறது. மேலும் அணியில் திக்விஜய் பிரதாப் சிங்கும் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சுமித் நாகல், சசிகுமார் விலகல் தொடர்பாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதகுறித்து ஏஐடிஏ பொதுச் செயலர் துபார் கூறியதாவது: இது தவறான விஷயமாகும். தேச நலன், தேசத்துக்காக விளையாடுகிறோம் என்று கூறும்போது, வீரர்கள் மறுப்பது சரியல்ல. தேசத்துக்காக விளையாட மாட்டோம் என்று கூறுவது எப்படி சரியாகும். இதுதொடர்பாக வரும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுமித் நாகல், நிதி நெருக்கடியால் அவதிப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு டெல்லி லான் டென்னிஸ் சங்கம் ரூ.5 லட்சம் நிதியை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு டேவிஸ் கோப்பை போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் 2019-ல் மோதியிருந்தது. அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக கஜகஸ்தானில் போட்டி நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE