“தோனி கொடுத்த அட்வைஸே காரணம்” - கடைசி ஓவர் பதற்றம் குறித்து ரிங்கு சிங்

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஓபனர்களாக களம்கண்ட நிலையில், முதல் ஓவரிலேயே ருதுராஜ் ரன் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 21 ரன்கள் குவித்தாலும் 3வது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இதன்பின் இஷான் கிஷனுடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடினார். இருவருமே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி ரன் குவிப்பதை வேகப்படுத்தினர். இருவருமே விரைவாக அரைசதம் கடந்தனர். பின்னர் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷான் கிஷன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்களை சேர்த்தார் ரிங்கு சிங். அடுத்த நான்கு பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலை வந்த போது, அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். ஓவரின் ஐந்தாவது பந்தில் 2வது ரன் ஓடும் போது அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டாக, கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை உண்டானது. ஆனால் கடைசி பந்தில் ரிங்கு சிங் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் சிக்சர் விளாசி வெற்றியை தேடிதந்தார்.

போட்டிக்கு பின் பேசிய ரிங்கு சிங்கிடம் கடைசி பந்தில் பதற்றமில்லாமல் விளையாடியது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "அதற்கு காரணம் தோனிதான். எப்போதும் அமைதியாக, குறிப்பாக கடைசி ஓவர்களில் அழுதத்தின் கீழ் அமைதியாக இருக்க என்ன செய்வது என அவரிடம் விவாதித்தேன். அவர் என்னிடம் முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சிக்கவும், நேராக பந்து வீச்சாளரைப் பார்க்கவும் சொன்னார். அவர் சொன்னதை பின்பற்றினேன். முடிந்தவரை நேற்று நான் அமைதியாக இருக்க முயற்சித்தேன்" என்று ரகசியத்தை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE