உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவின் டாஸ் ரகசியம் - வெளிப்படுத்திய அஸ்வின்

By செய்திப்பிரிவு

சென்னை: உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு டாஸ் ஒரு காரணமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் டாஸ் வெற்றிக்கு பின்னால் நடந்த சம்பவங்கள் குறித்து இந்திய வீரர் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

இந்த தோல்வி குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று சேசிங் தேர்வு செய்தது குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி உடன் டாஸ் குறித்து நடத்திய உரையாடலை தனது யூடியூப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் அஸ்வின் பேசுகையில், "ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி உடன் உரையாடும்போது, 'எப்போதும் முதலில் பேட் செய்வதை விரும்பும் ஆஸ்திரேலியா, டாஸ் வென்றும் ஏன் சேசிங்கை தேர்வு செய்தார்கள்' எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த பெய்லி, "ஐபிஎல் மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். இங்குள்ள மைதானத்தின் சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படியல்ல. மாலைநேர விளக்கு ஓளியில் நன்றாக தெரியும்.

அதேபோல், பனிப்பொழிவு சிவந்த மண்ணில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக சுழல வைக்கும். இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகிவிடும்" என கூறினார். அவரின் அந்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது." என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE