“240 ரன்களைக் கொண்டு எப்படி உலகக் கோப்பையை வெல்ல முடியும்?” - இந்திய அணியை விமர்சித்த கம்பீர்

By ஆர்.முத்துக்குமார்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி மிடில் ஓவர்களில் ரிஸ்க் எடுக்கும் ஒருவரை வைத்து அதிக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கே.எல்.ராகுல் அடித்து ஆடியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

3-வது உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று அனைவரிடத்திலும் 100 சதவீதம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பல்லைப் பிடுங்கிய பாம்பு போல் ஆகிவிட்டது. ஆஸ்திரேலிய அணி பிரமாதமாக ஆடியதற்கு அவர்களது, திட்டமிடுதலும் செயல்படுத்தலுமே காரணம். இந்திய அணிக்கு பல நெருக்கடிகள், அழுத்தங்கள் சேர்ந்து கொண்டன என்று சில ஊடகங்களும், சில கருத்தாளர்களும் சொல்கின்றனர்.

சுதந்திரமாக ஆட முடியாததற்கு வெற்றி நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதே காரணம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கிரிக்கெட் காரணங்களைத்தான் நாம் பேச முடியும். நெருக்கடிகளைக் கொடுக்கும் சூழ்நிலைகளை அறிந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் கூறுவதைக் கேட்போம்:

“இது இரட்டைக் கூர்முனை உள்ள வாள். எந்த அணி தைரியமாக ஆடுகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஒரு கூட்டணியை அமைக்க நீண்ட நேரம் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால், 11-வது ஓவர் முதல் 40-வது ஓவர் வரை எடுத்துக்கொள்வது மிக நீண்ட நெடும் நேரம். கோலியோ அல்லது ராகுலோ ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்.

150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும் பரவாயில்லை இந்திய அணியின் 6-7 டவுன் பேட்டர்கள் அடித்து ஆடியிருக்க வேண்டும். ஆனால், 50 ஓவர் முழுவதும் ஆடி 240 ரன்கள் எடுத்து விட்டு அதை தடுத்து ஆட முடியுமென்பது முடியாத காரியம். அதுவும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இது நடவாத காரியம். ஒன்று 150 ஆல் அவுட், அல்லது 300 ரன்கள் இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். இங்குதான் இந்தியா சுணங்கி விட்டது. ரோஹித் சர்மா என்ன செய்திருக்க வேண்டும்? ‘நான் அவுட் ஆனாலும் பரவாயில்லை நமக்குத் தேவை ரன்கள்... ரன்கள் மட்டுமே’ என்று வீரர்களிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.

கோலியை நான் குறை கூறவில்லை, ஏனெனில் அவர் ரோல் என்பது நின்று நிலைத்து கடைசி வரை ஆடுவது. அதுதான் இந்த உலகக் கோப்பையில் அவரது ரோல் அதை அவர் மிகவும் திறம்படவே செய்தார். ஆனால், கே.எல்.ராகுல் ஆக்ரோஷமாக ஆடியிருக்க வேண்டும். அவர் ஆக்ரோஷமாக ஆடி அவுட் ஆனால் கூட என்ன ஆகும்? நாம் 150 ஆல் அவுட் அவ்வளவுதானே. ஆனால், அது கிளிக் ஆகியிருந்தால் நாம் 300 ரன்கள் எடுத்திருப்போமே. அப்படி ஆடியிருந்தால் இந்தியா உலக சாம்பியன் ஆகியிருக்குமே. இது என்ன 1990-களின் கிரிக்கெட்டா? 240 ரன்கள் என்பது நல்ல ஸ்கோரே அல்ல. 300+ ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இந்தியா தைரியமாக ஆடவில்லை” என்றார் கம்பீர்.

ஒரு புறம் 5 மாநில தேர்தல்கள், 2024 மெகா தேசியத் தேர்தல்களை மனதில் கொண்டு இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற கட்சி அரசியலின் நெருக்கடிகளும் அழுத்தங்களும்தான் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்பது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதை மூடி மறைக்கவே பாஜக எம்.பியான கவுதம் கம்பீர் கே.எல்.ராகுலை தோல்விக்கான காரணமாக பலிகடாவாக்குகிறார் என்ற பார்வையும் தவிர்க்க முடியாதது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE