மறக்குமா நெஞ்சம் | கடந்த ஆண்டு இதே நாளில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வலுவான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இருந்தது சவுதி அரேபியா. அதனை கால்பந்து ரசிகர்கள் தொடங்கி ஆர்வலர்கள் வரை யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றி என்றே சொல்லலாம். நல் வாய்ப்பாக இந்த ஆட்டம் குரூப் போட்டியாக அமைந்தது. அதுவே நாக்-அவுட் சுற்றில் நடந்திருந்தால் அர்ஜென்டினா சாம்பியன் பட்டமே வென்றிருக்காது.

குரூப்-சி பிரிவில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. ஆட்டத்தின் 10-வது நிமிடமே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் மெஸ்ஸி. 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், ஆட்டம் முடியும் வரை அந்த ஒற்றை கோலை மட்டுமே அர்ஜென்டினா பதிவு செய்திருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது பாதியில் முறையே 48 மற்றும் 53 என 300 நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செத்தது சவுதி. அதுவும் இந்த தொடரின் முடிவில் சிறந்த கோல் கீப்பர் என அறியப்பட்ட மார்டினஸை நேர்த்தியாக கடந்து இந்த கோல்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 36 போட்டிகளில் தொடர் வெற்றி என்ற அர்ஜென்டினாவின் சாதனையை தகர்த்தது சவுதி. 2-1 என்ற கோல் கணக்கிலான இந்த வெற்றியை சவூதி அரேபியா கோலாகலமாக கொண்டாடி தீர்த்தது.

இந்தப் போட்டி 2022 உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினாவுக்கு முதல் போட்டியாக அமைந்தது. அதன் பிறகு காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனை வெறித்தனமாக இருக்கும் என சொல்வது போல குரூப் சுற்றில் மெக்சிகோ, போலாந்து அணிகளையும், ரவுண்ட் ஆப் 16-ல் ஆஸ்திரேலியா, காலிறுதியில் நெதர்லாந்து, அரை இறுதியில் குரோஷியா, இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE