பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்

By செய்திப்பிரிவு

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்களான உமர் குல், சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரில் சில மோசமான தோல்விகளை பதிவு செய்த அந்த அணி 6-வதுஇடத்துடன் தொடரை நிறைவு செய்தது. இதைத் தொடர்ந்து பாபர் அஸம்கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பந்து வீச்சு பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்காவின் மார்னே மோர்க்கலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உலகக் கோப்பை தொடரில் மோசமான செயல் திறனை பாகிஸ்தான் வெளிப்படுத்தியதை தொடர்ந்து அந்த அணியின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மற்றும் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சார் வஹாப் ரியாஸ் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த வரிசையில் தற்போது அணியின் வேகப்பந்து வீச்சுபயிற்சியாளராக உமர் குல்லும்,சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல், 2009-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்தார். இதற்கு முன்னரும் அவர், பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேவேளையில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் முதன்முறையாக தற்போதுதான் பயிற்சியாளர் பதவியை அணுக உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிவரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 2024-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதிமுடிவடைகிறது. இதன் பின்னர்பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து சென்று டி 20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 12 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரு தொடர்களுக்கும் பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

இவர்களது நியமனத்தின் மூலம் வெளிநாட்டு பயிற்சியாளர்களான மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோரது ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE