”இதுபோல நடக்கும், எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள்” - இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்ததன் வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும் இந்திய அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

இந்திய அணி வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடியின் வீடியோவை தமிழாக்கம் செய்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வீடியோவில் சோகமாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, ''நீங்க எல்லாரும் மொத்தமா 10 ஆட்டங்களையும் ஜெயிச்சு வந்துருக்கீங்க. விடுங்க தம்பிகளா, நாடே உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது. கவலைப்படாதீங்க. நீங்கள் எல்லாரும் சிறப்பாக முயற்சி செய்தீர்கள். விடுங்க பார்த்துக்கலாம். இதுபோல நடக்கும், சிரித்துக் கொண்டே இருங்கள். எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள். இந்த நேரத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பலமாக இருக்க வேண்டும். நாடு உங்களை எதிர்நோக்கி இருக்கிறது'' என இந்திய வீரர்களிடம் பிரதமர் மோடி பேசி ஊக்கப்படுத்தினார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மொகமது ஷமியை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, "ஷமி, இம்முறை சிறப்பாக விளையாடினீர்கள்" என்று தட்டிக்கொடுத்து பாராட்டினார். இறுதியில், "டெல்லி வந்ததும் நான் உங்களை சந்திக்கிறேன். இது எனது அழைப்பு" என்று இந்திய வீரர்களை டெல்லியில் வந்து சந்திக்க அழைப்பு விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE