ஏடிபி பைனல்ஸ் தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

துரின்: ஏடிபி பைனல்ஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொண்ட ஏடிபிபைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின்நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னருடன் மோதினார். ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

ஏடிபி பைனல்ஸ் தொடரில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 7-வது முறையாகும். இதன் மூலம் இந்த தொடரில் 6 பட்டங்கள் வென்றிருந்த முன்னாள் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச். 36 வயதான ஜோகோவிச், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றார்.

தொடர்ந்து பிரெஞ்சு ஓபனில் வாகை சூடினார். பாரம்பரியமிக்க விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸிடம் தோல்வி அடைந்த போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனில் மகுடம் சூடினார் ஜோகோவிச். தற்போது ஏடிபி தொடரையும் வென்று இந்த ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.

ஏடிபி பைனல்ஸ் தொடரின் லீக் சுற்றில் ஜோகோவிச் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதே இந்த ஆண்டை நம்பர் 1 வீரராக நிறைவு செய்வதை உறுதி செய்து இருந்தார். உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜோகோவிச் ஆண்டை நிறைவு செய்வது இது 8-வது முறையாகும். 400 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளார். இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் 400 வாரங்கள் முதல் இடத்தில் இருந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர், படைத்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 310 வாரங்களில் முதலிடத்தில் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE