“கோலியை நான் ஆட்டமிழக்கச் செய்தபோது மைதானத்தில் நிலவிய அமைதி சிறப்பான தருணம்” - கம்மின்ஸ்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த வெற்றி குறித்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இது நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்த நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்தபோது மைதானத்தில் அமைதி நிலவியது. அது நான் மைதானத்தில் அனுபவித்த இனிமையான தருணமாகும். அப்போது மைதானத்தில் நிலவிய அமைதி எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவர் பெரும்பாலான ஆட்டங்களில் சதங்களை விளாசிவிடுவார். அவரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்போது மைதானத்தில் ஏற்பட்ட மயான அமைதியை உணர்ந்தேன். அது எனக்குத் திருப்தி அளித்தது.

நான் தங்கியிருந்த ஓட்டலில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் நீல நிற உடையணிந்து மைதானத்தை நோக்கி நடந்து சென்றனர். அப்போது எனக்கு சிறிது பதட்டமாக இருந்தது. நான் எப்போதும் மிகவும் நிதானமாக இருக்கிறேன் என்று நினைப்பவன். ஆனால் இன்று காலை சிறிது பதட்டத்துடன்தான் இருந்தேன். ஆனால் மாலையில் நாங்கள் வெற்றியைப் பெற்றுவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE