ODI WC Final | டாஸ் வென்றது ஆஸி. - இந்தியா பேட்டிங்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் இந்தப் போட்டி விளையாடப்படுகிறது. இந்தியா 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்லும். அதே போல ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்குள் வந்துள்ளது.

“டாஸ் வென்றிருந்தால் நான் பேட்டிங் தான் செய்திருப்பேன். பிட்ச் சிறப்பாக உள்ளது. பெரிய போட்டி. ரன்கள் குவிக்க விரும்புகிறோம். இது அற்புதமான ஆட்டமாக இருக்கும். இங்கு ஒவ்வொரு முறையும் நாங்கள் விளையாடும் போதும் பெரிய அளவிலான ஆதரவு எங்களுக்கு இருக்கும். இது கிரிக்கெட்டின் மிகப்பெரிய நிகழ்வு. இறுதிப் போட்டியில் அணியை வழிநடத்த வேண்டும் என்பது கனவு. அது இன்று மெய்யாகி உள்ளது. சிறப்பாக விளையாடி முடிவை எட்ட வேண்டும். கடந்த 10 ஆட்டங்களில் நாம் செய்ததை இதிலும் செய்வோம்” என டாஸ் வென்றதும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களும் தத்தம் தேசிய கீதத்தைப் பாடினர். அரங்கில் உள்துறை அமித் ஷா இருந்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அரங்கம் முழுவதும் உற்சாகமாகப் பாடியது. முன்னதாக விமானப் படை விமானங்கள் சாகசத்தை நிகழ்த்திக் காட்டியது. அது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அரங்கம் முழுவதும் நீல நிறச் சட்டையில் இந்திய அணிக்கு பிரம்மாண்ட உற்சாகம் அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE