IND vs AUS: “இந்த நாளுக்காகத் தான் அனைவரும் காத்திருந்தோம்”: சச்சின் டெண்டுல்கர்

By செய்திப்பிரிவு

அகமாதாபாத்: "உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும். இந்த நாளுக்காகத் தான் அனைவரும் காத்திருந்தோம்" என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண அகமதாபத் வந்த சச்சின் டெண்டுல்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க வந்துள்ளேன். இன்று நாம் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன். இந்த நாளுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தோம்" என்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியையொட்டி விமான சாகசம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியை காண்பதற்காக மைதானத்துக்கு செல்கிறார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு கடந்த அக்.5-ம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் 45 லீக் ஆட்டங்கள், 2 அரை இறுதி ஆட்டங்கள் ஆகியவை நாட்டில் உள்ள 10 நகரங்களில் நடந்தன.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று பகல் 2மணிக்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 1.30 லட்சம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடைசியாக இரு அணிகளும் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தன. அப்போது இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆனால் இம்முறை இந்திய அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் 5 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE