ODI WC Final | IND vs AUS: 3-வது முறையாக மகுடம் சூடுமா இந்தியா?

By பெ.மாரிமுத்து

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளை குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4-வது முறையாக இறுதி சுற்றில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் 1983, 2003 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது லீக் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து நெருக்கடியை சந்தித்தது. 5 முறை சாம்பியனான அந்த அணி ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் விவேகமெடுத்த அந்த அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

அதிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் இருந்த ஆஸ்திரேலிய அணியை கிளென் மேக்ஸ்வெல் தனிநபராக காயம் பட்ட உடலுடன் போராடி இரட்டை சதம் விளாசி வெற்றி பெற வைத்தது அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 8-வது முறையாக இறுதி சுற்றில் கால்பதித்தது ஆஸ்திரேலிய அணி.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. தொடக்க ஓவர்களில் ரோஹித் சர்மா தாக்குதல் ஆட்டம் தொடுத்து சிறந்த அடித்தளம் அமைத்து கொடுப்பது நடு வரிசை பேட்ஸ்மேன்கள் ரன் ரேட் குறித்த அச்சம் இல்லாமல் துணிச்சலாக விளையாட பெரிய அளவில் உதவியாக உள்ளது. 124 ஸ்டிரைக் ரேட்டுடன் 550 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

இதேபோன்று ரன் இயந்திரமாக மாறி 711 ரன்கள் வேட்டையாடி உள்ள விராட் கோலியும் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார். 350 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில், 526 ரன்கள் சேர்த்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், 386 ரன்கள் சேர்த்துள்ள கே.எல்.ராகுல் ஆகியோரும் அபாரமான பார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் மட்டுமே பெரிய அளவில் ரன் குவிக்காத வீரராக உள்ளார். எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள கூடுதல் முயற்சி செய்யக்கூடும்.

ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா தனது பங்களிப்பை சீராக வழங்கி வருகிறார். அவருடன் சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் நடு ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்துபவராக திகழ்கிறார். அதிலும் அவர், பேட்ஸ்மேன்களின் மனவோட்டத்தை அறிந்து பந்து வீசுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதுமே இந்திய வீரர்கள் வியக்க வைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். நடப்பு தொடரில் 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ள போதிலும் முகமது ஷமி 23 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தல் கொடுத்து வரும் அவர், இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் அழுத்தத்துக்கு உள்ளாக்கக்கூடும்.

‘பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை வென்று கொடுக்கலாம், ஆனால் தொடரை பந்து வீச்சாளர்களால்தான் வென்று கொடுக்க முடியும்’ என்ற பழமொழியை முகமது ஷமியின் செயல் திறன் நிரூபிக்கும் வகையில் உள்ளது. கணுக்கால்களை தாக்கும் ஜஸ்பிரீத் பும்ராவின் யார்க்கர்கள், முகமது சிராஜின் சீரான வேகம் ஆகியவையும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். இன்றைய போட்டிக்கு பயன்படுத்தப்பட உள்ள கருப்பு மண் ஆடுகளம், சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கருதப்படு கிறது. இதனால் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர் 528 ரன்கள் குவித்து வலுவாக உள்ளார். அவருடன் தொடக்க பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், இந்திய பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தக்கூடும். 426 ரன்கள் குவித்துள்ள மிட்செல் மார்ஷ், 398 ரன்கள் சேர்த்துள்ள கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். எனினும் ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோரது பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

நடப்பு தொடரில் இவர்களது சராசரி 38-ஐ தாண்டவில்லை. இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் விளையாட முயற்சி செய்யக்கூடும். அதேவேளையில் மார்னஷ் லபுஷேனுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டாயினிஸை களமிறக்குவது குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் சிறிய இலக்கையே ஆஸ்திரேலிய அணி போராடிதான் வெற்றி பெற்றிருந்தது. எனினும் எப்போதுமே ஆஸ்திரேலிய வீரர்கள் அழுத்தமான தருணங்களில் கடுமையாக போராடி ஆட்டத்தின் போக்கை தங்களது பக்கம் இழுக்கும் திறன்களை கையாள்வதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இதை அரை இறுதி ஆட்டத்திலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் காண முடிந்தது.

ஆட்டத்தின் எந்த தருணத்திலும் போராட்ட குணத்தை விட்டுக்கொடுக்காத அந்த அணி நிச்சயம் இந்திய அணிக்கு சவால்கள் அளிக்க முயற்சிக்கக்கூடும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் கூட்டணி அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தொடக்க ஓவர்களில் மிரளச் செய்திருந்தது. பார்முக்கு திரும்பி உள்ள இந்த வேகக்கூட்டணி இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவளையில் சுழற்பந்து வீச்சில் 22 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள ஆடம் ஸம்பாவும் நடு ஓவர்களில் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்ற 2-வது அணி என்ற சாதனையை படைக்கும். இந்த வகையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 2003 மற் றும் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி அடையாமல் வாகை சூடியிருந்தது. இந்திய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, இரு முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என அனைத்திலும் இறுதிக்கட்ட தடைகளை தாண்டவில்லை. இதற்கு இம்முறை முடிவு கட்டி 140 கோடி மக்களின் கனவை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நினைவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்