ODI WC Final | ‘வித்தியாசமாக செய்ய வேண்டியது இல்லை’: ரவி சாஸ்திரி

By செய்திப்பிரிவு

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டியது இல்லை என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி வீரர்கள் ரிலாக்ஸாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள், சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணி. இதனால் அவர்கள், வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டியது இல்லை. இதுவரை விளையாடியது போன்றே செயல்பட்டால் போதுமானது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும். களத்தில் நிதானமாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டும். அழுத்தத்தை கையாண்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே அவர்களது பணி என்ன என்பது தெரியும். நல்ல விஷயம் என்றவென்றால் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டும் சார்ந்து ஒட்டுமொத்த அணியும் இல்லை என்பதுதான். 8 அல்லது 9 வீரர்கள் ஆட்டத்துக்கு ஆட்டம் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளனர். இது அற்புதமான விஷயம். இந்திய அணியின் பந்து வீச்சு அபாரமாக உள்ளது. பந்து வீச்சில் வீரர்கள் வெளிப்படுத்தும் வித்தியாசங்கள், திறமையைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE