ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்று என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு அது இனிதான பயணமாக இருந்தது இல்லை. 5 முறை ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ள போதிலும் ஒரு முறைகூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ‘மழை விதியால்’ தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது. ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் லான்ஸ் குளூஸ்னர் போராட்டமும் வீண் ஆனது. ‘டை’-யில் முடிவடைந்த அந்த ஆட்டத்தில் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா வெளியேறியது.
2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 149 ரன்களில் சுருண்டு தென் ஆப்பிரிக்க அணி வெளியேறியது. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது. கிராண்ட் எலியாட் 73 பந்துகளில் விளாசிய 84 ரன்களின் உதவியால் நியூஸிலாந்து அணி ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி கண்டது. இதனால் 4-வது முறையாக தென் ஆப்பிரிக்க அணியின் இறுதிப் போட்டி கனவு நொறுங்கியது.
இந்த சோகங்களுக்கு இம்முறை தீர்வு காண்பதில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி கவனம் செலுத்தும் வகையில் நடப்பு உலகக் கோப்பை தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பிரதான 6 பேட்ஸ்மேன்களில் 5 பேர் சதம் அடித்துள்ளனர். இதில் இன்றைய டேவிட் மில்லரின் சதமும் அடக்கம். அதிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவிண்டன் டிகாக், 4 சதங்களை விளாசி இன்றைய அரையிறுதி போட்டிக்கு முன்னதாக 591 ரன்கள் வேட்டையாடி இருந்தார்.
இவர் தவிர, 2 சதங்கள், 2 அரை சதங்களுடன் 442 ரன்கள் குவித்துள்ள ராஸி வான்டெர் டஸன், 396 ரன்கள் குவித்துள்ள எய்டன் மார்க்ரம், 326 ரன்கள் சேர்த்துள்ள ஹெய்ன்ரிச் கிளாசன் என சிறப்பான ஃபார்மை தொடர் முழுவதுமே வெளிப்படுத்தினர் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். பந்துவீச்சில் மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா ஆகியோர் வலுவாக திகழ்கின்றனர். இதில் 17 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் யான்சன். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜின் சீரான செயல்பாடு, அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுத்த தப்ரைஸ் ஷம்சியின் கெஸ்ட் பெர்ஃபாமென்ஸ் என புது வேகத்தில் இன்றைய அரையிறுதி போட்டிக்கு களம்கண்டது தென் ஆப்பிரிக்கா.
முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தும் கனவுடன், களம்கண்ட தென் ஆப்பிரிக்காவை துவள செய்தது மிட்செல் ஸ்டார், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சு. இந்த மூவரும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உட்பட 8 விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் இவர்களை விட தென் ஆப்பிரிக்காவை கனவை தகர்த்ததில் முக்கிய பங்கு வகித்தது ஆஸி.யின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டே. தெம்பா பவுமா, குவிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ராஸி வான் டெர் டஸ்ஸன் என பிரதான நான்கு பேட்ஸ்மேன்களை தென் ஆப்பிரிக்கா இழந்தாலும், ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் 3 ரன் ரேட்டை தொட்டது அந்த அணி. 95 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர். அப்போது பார்ட் டைம் பவுலர் என்ற முறையில் டிராவிஸ் ஹெட் வரவழைக்கப்பட்டார். தனது 4வது பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த கிளாசனை க்ளீன் போல்டாக்கிய ஹெட், அடுத்து பந்திலேயே மார்கோ யான்சனை டக் அவுட் செய்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். இதனால் ஒருபக்கம் டேவிட் மில்லர் பில்லர் போல் நின்று விளையாடினாலும், அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் மற்ற பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் சிதைந்தனர்.
பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவுக்கு வேட்டு வைத்தார் இதே டிராவிஸ் ஹெட். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 29 ரன்களில் விக்கெட்டாக, பூஜ்ஜியத்தில் மிட்செல் மார்ஷ் நடையைக்கட்ட எதிர்பாரா சரிவை சந்தித்தது ஆஸ்திரேலிய அணி. இதே போன்றொரு சரிவைத் தான் தென் ஆப்பிரிக்காவும் தனது இன்னிங்ஸில் சந்தித்தது. அப்போது எய்டன் மார்க்ரம் - ராஸி வான்டெர் டஸன் விக்கெட் சரியக்கூடாது என்பதற்காக டிஃபென்ஸ் ஆடுகிறோம் என்கிற பெயரில் ஆமை வேகத்தில் ஆடினர். இதனால் ஆரம்ப கட்டங்களிலேயே 3 ரன் ரேட்டுக்கும் குறைவாக சென்றது அந்த அணியின் ஸ்கோர். ஆனால், டிராவிஸ் ஹெட் இந்த நிலைக்குச் செல்லவில்லை. விக்கெட்கள் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை மனதளவில் தடுமாறச் செய்தார்.
ஒருகட்டத்தில் அரைசதம் கடந்தவர், 9 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 62 ரன்கள் சேர்த்து விக்கெட்டானார். டிராவிஸ் ஹெட்டின் இந்த அதிரடியால் 15வது ஓவரின் தொடக்கத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் பாதியை அதாவது 100+ ரன்களை எளிதாக கடந்தது. பின்வரிசையில் இறங்கிய ஸ்மித் தன் பங்குக்கு மட்டையை சுழற்ற தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8-வது உலகக் கோப்பை ஃபைனலில் காலடி எடுத்துவைத்தது ஆஸ்திரேலியா. அதேநேரம், முதல் உலகக் கோப்பை கனவை கனவாகவே சுமந்துகொண்டு தோல்வியால் நாடு திரும்புகிறது தென் ஆப்பிரிக்கா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago