50 சதங்களின் ஒப்பீடு சரியா? - கோலிக்கு கிடைத்தவையும், சச்சின் சந்தித்த தொந்தரவுகளும்!

By ஆர்.முத்துக்குமார்

சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு பேட்டிங்கில் இந்திய அணியின் பெருமைகளை உலக அளவில் உயர்த்திய பெருமை ஒரு வீரரை சேருமென்றால் அது விராட் கோலி தான் என்று தைரியமாகக் கூறலாம். விராட் கோலி 291 இன்னிங்ஸ்களிலேயே 50-வது ஒருநாள் சதம் என்ற உலக சாதனையை எட்டி சச்சின் டெண்டுல்கர் என்னும் ஜாம்பவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில்தான் 49-வது சதத்தை எட்டினார்.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுக்கும் போதே 75 ஒருநாள் போட்டிகளைக் கடந்து விட்டிருந்தார் என்பது வேறு விஷயம் என்றாலும், விராட் கோலியின் பேட்டிங்கை எந்த ஒரு பயிற்சியாளரோ, கேப்டனோ தொந்தரவு செய்யவில்லை. மாறாக சச்சின் டெண்டுல்கரின் கரியர் தொந்தரவுகளும் இடையூறுகளும் நிரம்பியது. ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில்தான் களமிறங்க முடிந்தது. நியூஸிலாந்தில் ஒரு மேட்சில் தானே கேட்டு ஓப்பனிங் இறங்கி 49 பந்துகளில் 82 ரன்களை விளாசி இன்று ஆடப்படும் அதிரடி கிரிக்கெட்டின் முன்னோடியானார் சச்சின். அவருக்கு நிறைய சவால்கள் இருந்தன. ஒன்று மேட்ச் பிக்சிங் என்னும் பூதம், இரண்டு கிரெக் சேப்பல் காலக்கட்டத்தில் அவர் செய்ய நினைத்த மாறுதல்களினால் பாதிக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர்.

கிரெக் சேப்பல் தவறாகச் சிந்திக்கவில்லை. அவர் நினைத்தது என்னவெனில், சச்சின் போன்ற ஒரு வீரர் 39 வயது வரையிலும் ஓப்பனிங்கிலேயே இறங்கி பிற்பாடு ஓய்வு பெற்று விட்டால் அந்த இடத்தில் பெரிய ஓட்டை விழும் நிரப்புவது கடினம். ஆகவே அவரை பின் வரிசையில் இறங்கி மேட்சை வெற்றி பெற ஆடுமாறும், ஓப்பனிங்கில் ஒரு புதிய வீரரை உருவாக்கவும் முனைந்தார். அதேபோல் 3-ஆம் நிலையில் தொடர்ச்சியாக வீரர்களை சுழற்சி முறையில் இறக்கும் முடிவை இவரும் ராகுல் திராவிட்டும் சேர்ந்து எடுத்ததால் ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான் இந்திய அணி 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சேஸிங்கில் வெற்றி பெற்று சாதனையை இன்றளவும் வைத்துள்ளது. அப்போது 4ம் நிலையில் சச்சினை இறங்க வலியுறுத்தியது 2007 உலகக் கோப்பையின் சீரழவில் போய் முடிந்தது. சச்சினுக்கு அந்த நிலையில் ஆடுவது சரிப்படவில்லை.

மாறாக கோலிக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. குறைந்தது அவரது பேட்டிங்கை எந்த கேப்டனோ, பயிற்சியாளரோ தொந்தரவு செய்யவில்லை. சுமூகமாகவே அவரது பேட்டிங் சென்றது. இது அவருக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் முதலில் பாகிஸ்தான் மண்ணில் தொடங்கி பிறகு நியூஸிலாந்து, இங்கிலாந்து, என்று சென்று குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகளையாவது வெளிநாட்டில் அதுவும் கடினமான தொடர்களில் ஆடிவிட்டுத்தான் இந்திய மண்ணில் ஆடத் தொடங்கினார். அந்த மூன்று தொடர்களில் வேறு வீரர்கள் அறிமுகத்திலேயே ஆடியிருந்தால் கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கும். சச்சின் ஒரு ஜீனியஸ் என்பதாலும் once in a life time player என்பதாலும் வெற்றிகரமாக அந்தக் கட்டத்தைக் கடந்து வந்து சாதனை நாயகனானார். கோலிக்கு அப்படியெல்லாம் இல்லை. அவருக்கு ஸ்மூத்தாகவே எல்லாம் நடந்தது. ஆகவே சச்சினையும் கோலியையும் ஒப்பிடுவது மட்டுமல்ல, சம்பந்தமில்லாத இரு காலக்கட்ட வீரர்களை கிரேட்களை ஒப்பிடுவதும் மிகவும் அபத்தமே.

கோலி என்னும் சேஸிங் மன்னன்: ஒருநாள் போட்டிகளில் 2வது இன்னிங்ஸ்களில் அதிக சதம் எடுத்தவர்களில் உலகத்திலேயே நம்பர் 1 வீரர் விராட் கோலி. 27 முறை இலக்கை விரட்டும் போது கோலி சதம் எடுத்துள்ளார், அதாவது 50 ஒருநாள் சதங்களில் 27 சதங்கள் சேஸிங்கில் வந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியிலேயே இருமுறை அவர் சேஸிங் சதம் அடித்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக அது நிறைவேறாமல் 90களில் முடித்தார். சச்சின் டெண்டுல்கர் சேஸிங்கில் 17 சதங்களையே எடுத்துள்ளார். சேஸிங்கில் ரோகித் சர்மா 15, கிறிஸ் கெயில் 12, திலகரத்ன தில்ஷான் 11, சனத் ஜெயசூரியா 10, சயீத் அன்வர் 10, மார்டின் கப்தில் 9, பிரையன் லாரா 9, ஷிகர் தவான் 8 என்று சேசிங் சத நாயகர்களை வரிசைப்படுத்தலாம்.

தோனி குறைந்த இலக்குகளின் போது விக்கெட்டுகளை இழந்து திணறும் போது போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்தார். 300 ரன்களுக்கும் மேலான இலக்குகளை அவர் கேப்டனாக இருந்த காலக்கட்டங்களில் அவர் கடைசி வரை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்ததில்லை என்பதோடு அந்த இலக்கை எட்ட முடியாது என்ற மனநிலையிலும் ஆடியவர் என்பதற்கு புள்ளி விவரங்கள் உள்ளன. பிறகு 47 ஓவர்களில் முடிக்க வேண்டிய இலக்குகளை கடைசி வரை இழுத்து வெற்றி பெறும் போக்கும் தோனியிடம் உண்டு. கோலி அப்படியல்ல கோலி பினிஷ் செய்த மேட்ச் எல்லாமே சவுகரியமாக வெற்றி பெற்ற போட்டிகள் என்பதற்கும் புள்ளி விவர ஆதாரங்கள் உண்டு. மேலும் சேஸிங்கில் கோலியின் சராசரி 65.5. சேஸிங்கில் சராசரி அளவில் கோலிக்கு அடுத்த இடத்தில் டிவில்லியர்ஸ் (56.8). மைக்கேல் பெவன் 56.5, மைக்கேல் கிளார்க் 53.9, பாபர் அஸம் 53.1, வாட்சன் 52.8, ஜோ ரூட் 51.9, தோனி 51, இமாம் உல் ஹக் 50.5 என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரங்கள்.

அதேபோல் உள்நாட்டில் கோலியின் சராசரி 60.92. வெளிநாட்டிலும் அவர் சராசரி 55.58. வெளிநாட்டில் 21 சதங்கள், உள்நாட்டில் 24 சதங்கள் அடித்துள்ளார். 2011 முதல் 2023 வரை ஓராண்டில் ஆயிரம் ரன்களுக்கும் மேலாக 8 முறை எடுத்துள்ளார். 2010-ல் 995 ரன்கள், 5 ரன்களில் அந்த ஆண்டில் ஆயிரம் ரன்கள் மைல்கல்லை இழந்தார் கோலி. இதில் வேடிக்கை என்னவெனில் வெளிநாடுகளில் இலங்கையில்தான் விராட் கோலியின் சராசரி குறைவு. ஆனால் அதுவே 48.9 என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

கிரிக்கெட்டில் எப்படி விவ் ரிச்சர்ட்ஸ் என்ற ‘வி’-யை மறக்க முடியாதோ, அதேபோல்தான் விராட் கோலி என்ற ‘வி’யையும் மறக்க முடியாது. இந்த இரு வீரர்களைப் போல் இன்னொரு வீரர் உருவாவது இனி கடினம்தான். நேற்று மும்பையில் தன்னுடைய குரு, ஹீரோ சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் 50வது சதம் என்னும் சாதனையை நிகழ்த்தியது விராட் கோலி வாழ்வில் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்விலும் இந்திய கிரிக்கெட்டிலும் மறக்க முடியாத நாளாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE