“உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு” - ரவி சாஸ்திரி

By செய்திப்பிரிவு

மும்பை: 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது. வரும் 15-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள முதல் அரை இறுதியில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளும், 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளும் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் நிலை குறித்து முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி கூறியதாவது: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறது.

தற்போது உலக கோப்பையை இந்திய அணி வெல்லாவிட்டால், இன்னும் 2 அல்லது 3 உலக கோப்பைகள் வரை நாம் காத்திருக்க வேண்டும். இந்திய அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருப்பவர்களில் 8-க்கும் மேற்பட்ட வீரர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி வருவது இந்திய அணிக்கு சிறப்பான அம்சமாக உள்ளது. இப்படிப்பட்ட இந்திய அணி உலக கோப்பையை வெல்லாவிட்டால், அடுத்த இரண்டு, மூன்று உலக கோப்பையை நினைக்க வேண்டாம்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றனர். ஒரு ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்.

அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே, இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 2011-ல் நாம் உலகக் கோப்பையை வென்றோம். தற்போது 12 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE