“2019 அரையிறுதியை நினைக்காமல் இருக்க முடியாது” - இந்தியாவை சீண்டும் ராஸ் டெய்லர் | ODI WC 23

By செய்திப்பிரிவு

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி பதற்றமாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி நிகழ்வொன்றில் பேசிய ராஸ் டெய்லர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதன்படி, "அரையிறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்ள இந்தியா பதற்றமாக இருக்கும். இந்தியாவை எதிர்கொள்ள நியூஸிலாந்து தயாராகவே உள்ளது. இந்தச் சூழலில் 2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை நினைக்காமல் இருக்க முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2019-லும் இந்தியா இதேபோல் பக்கா ஃபார்மில் இருந்து அரையிறுதிக்கு சென்றது.

அதேநேரத்தில் நாங்கள், பாகிஸ்தானை முதல் நான்கு இடங்களுக்குள் வரவிடாமல் வைப்பதில் கவனம் செலுத்தினோம். இதே பொருத்தங்கள் இந்த உலகக் கோப்பையிலும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இம்முறை, இந்தியாவுக்கு சொந்தமான மைதானங்கள். அதுவும் லீக் போட்டிகளில் தோல்விகளே இல்லாமல் இந்தியா அரையிறுதியை எட்டியுள்ளது. இந்தியா பலமாக உள்ளது உண்மைதான். ஆனால், நியூஸிலாந்தை இழப்பதற்கு எதுவும் இல்லை. எனவே நியூஸிலாந்து ஆபத்தான அணியாக இருக்கும்.

பலமான இந்தியாவை எதிர்கொள்வது என்பது நியூஸிலாந்துக்கு கடினமான பணியே. நிச்சயம் அந்த சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். வான்கடே மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானது. நியூஸிலாந்து முதலில் பேட் செய்தாலும், பந்துவீசினாலும் அதிரடியாக தொடங்கினால் போட்டியில் பெரிய நம்பிக்கை கிடைக்கும். இரண்டு இன்னிங்ஸிலும் முதல் பத்து ஓவர்கள் முக்கியமானவை. இந்தியா பேட்டிங் செய்யும்போது, முதல் பத்து ஓவர்களில் டாப் ஆர்டரில் மூன்று வீரர்களை வீழ்த்தி இந்திய மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியா டாப் ஆர்டரில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் உட்பட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என தரம் வாய்ந்த பேட்டர்கள் உள்ளனர். அவர்களை வீழ்த்த வேண்டும்.

இந்திய பவுலிங்கிலும் இதே நிலைதான். நியூஸிலாந்து ரன்கள் குவிக்க விரும்பினால், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ் மற்றும் மொகமது ஷமி என இந்தியாவின் அபாயகரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூவருமே ஆபத்தான பவுலர்கள். எனவே விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால், ரன்கள் குவிப்பது சற்று எளிதாக இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார் ராஸ் டெய்லர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE