‘கேப்டன்’ பாபர் அஸமை பலிகடா ஆக்குவதா?- முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கண்டனம்!

By ஆர்.முத்துக்குமார்

பாகிஸ்தான் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் தோற்று வெளியேறியுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் சொதப்பியது ஆனால் கேப்டன் பாபர் அஸமை மட்டும் பலிகடாவாக்கி அவரை கேப்டன்சியை விட்டு தூக்கி விட்டால் போதுமா, தோல்விக்குப் பின்னால் பழுதடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதன் கிரிக்கெட் உள்கட்டமைப்பும் உள்ளது என்றும் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் போன்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாபர் அஸமின் கேப்டன்சி, அணித் தேர்வு, களவியூகம், பந்து வீச்சு மாற்றங்கள் அனைத்துமே சரியாக இல்லை என்பதுதான் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் விமர்சனமாக வர்ணனையில் வெளிப்பட்டது. மேலும் பாபர் அஸமின் கேப்டன்சி அழுத்தத்தினால் அவரது தனிப்பட்ட பேட்டிங்கும் பாதிக்கப்பட்டது. அவரது பங்களிப்பு இருந்தால்தான் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் நிமிர்ந்து நிற்கும், ஆனால் அவர் பங்களிப்பு கேப்டன்சி அழுத்தம் காரணமாக சரியாக அமையாமல் போனது. இந்த உலகக் கோப்பையில் பாபர் அஸம் 9 இன்னிங்ஸ்களில் வெறும் 320 ரன்களையே எடுத்துள்ளார். 2019 உலகக் கோப்பியில் 474 ரன்களை குவித்தார் பாபர்.

மேலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியப் பிட்ச்களில் ஆடிப் பழக்கமில்லாத அனுபவமின்மையும் அவர்களது பின்னடைவுகளுக்குப் பிரதான காரணமாகும். ஒரு காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் இரு அணி வீரர்களும் சமபலம் உள்ளவர்களாக இருந்தனர், ஆனால் சச்சின், சேவாக், திராவிட், லஷ்மண், வருகைக்குப் பிறகும், இப்போது விராட் கோலி, ரோகித் சர்மா வருகைக்குப் பின்பும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை ஹீரோக்களாக கருதும் போக்கு இருப்பதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது, இதுவும் பாகிஸ்தானின் இந்தியா உடனான சமீபத்திய தோல்விகளுக்கு ஒரு காரணம் என்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்று உலகக் கோப்பை தொடரில் சரியாக ஆடாத அணியாக வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த குழு விவாதத்தில் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் போன்றோர் கலந்து கொண்டு பேசியதாவது:

வாசிம் அக்ரம்: கேப்டன் மட்டுமே அணியில் ஆடவில்லை. ஆனால் பாபர் அஸம் இந்த உலகக் கோப்பையிலும் இதற்கு முந்தைய ஆசியக் கோப்பையிலும் கேப்டன்சியில் பாபர் தவறுகள் செய்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவரை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு என்னும் சிஸ்டம் தான் தோல்விகளுக்குக் காரணம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தங்கள் பயிற்சியாளர் யார் என்றே வீரர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் பாபர் அஸமை மட்டும் பலிகடாவாக்க முடியாது.

பாபர் அஸம் ஒரு ஸ்டார் பிளேயர், அவர் ரன்கள் எடுத்தால் நாடே மகிழ்ச்சியடைகிறது. ஆனால் கேப்டன்சி அவரது சுமையை ஏற்றி விட்டது. கேப்டன்சியினால் பேட்டிங் அவரால் சரியாக ஆட முடியவில்லை. கிரீசில் இறங்கி விட்டால் கேப்டன் என்பதை மறந்து பேட்டர் என்ற நினைவுடன் ஆட வேண்டும், ஆனால் இது சொல்வதற்கு எளிது, செய்வது மிகமிகக் கடினம், என்றார்.

வாசிம் அக்ரம் கூறியதை ஏற்ற மிஸ்பா உல் ஹக், அணி நிர்வாகம், சிஸ்டம், மிடில் ஆர்டர் பேட்டிங் பிறகு மோசமான பவுலிங் ஆகியவைதான் பாகிஸ்தானின் இந்த ஆட்டத்திறன் தோல்விகளுக்குக் காரணம். இந்திய பிட்ச்களில் பாபர் பேட்டராக தோல்வி அடைந்து விட்டார். வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங் ஒன்றுமே இல்லாமல் வீசப்பட்டது. மொத்தத்தில் இத்தகைய அணியைத் தேர்வு செய்ததால் சிஸ்டத்தையும் பாபர் அஸமையும் குறைகூறுவதை தவிர்க்க இயலாது, என்று கூறினார் மிஸ்பா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE