ரவீந்திர ஜடேஜாவை ஆல்ரவுண்டர் என்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் கூறலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக அயல்நாடுகளில் அவரது பந்து வீச்சு கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 2 விதமான பார்வை உள்ளது. ஒன்று தோனி அவரை வேகப்பந்து வீச்சிற்கு ஆதரவான ஆட்டக்களங்கள் அல்லது முழுதும் பேட்டிங் சாதக ஆட்டக் களங்களில் ஸ்ட்ரைக் பவுலராக பயன்படுத்தாமல் வெட்டியாக ரன் கட்டுப்படுத்தும் பவுலராக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுப்பப்பட்டு வருகிறது.
இன்னொரு புறம் அவர் ஒரு மெதுவான இடது கை ஸ்பின்னர், கொஞ்சம் பேட்டிங் செய்பவர், எனவே அயல்நாட்டு டெஸ்ட் போட்டி ஆட்டக்களங்களில் அவரது பயன்பாடு மிகவும் குறைவு, அல்லது அவர் திறமை டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தயாரானது அல்ல என்ற இந்த இரண்டு பார்வைகள் நிலவுகின்றன.
இந்த இரண்டு பார்வையையும் தவிர அவருக்குப் பதிலாக அஸ்வினையே களமிறக்கவேண்டும் என்ற ஒரு பார்வையும் இருந்து வருகிறது.
தோனி அவரைப் பயன்படுத்தும் விதம் கேள்விக்குறியது என்ற பார்வையில் உண்மை உள்ளது. ஏனெனில் தோனி என்ன நினைக்கிறார். ஒரு முனையில் வேகப்பந்து வீச்சை முடுக்கி விட்டு இன்னொரு முனையில் ஜடேஜாவை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்துவது என்று மனக்கோட்டை கட்டிவருகிறார்.
ஆனால் ஜடேஜாவால் ரன்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. நேற்று இயன் பெல், ஜோஸ் பட்லர் என்று ஜடேஜா பந்து வீச்சை புரட்டி எடுத்ததுதான் நிகழ்ந்தது.
மேலும், ஒரு முனையில் வேகப்பந்து வீச்சு என்பது குறைந்தது ஒரு பிரெட் லீ-யையோ, மிட்செல் ஜான்சனையோ கோருவது. 130 கிமீ வேகத்தில் வீசினாலும் நம்மிடையே உள்ள ஒரே ஸ்ட்ரைக் பவுலர் இஷாந்த் சர்மாதான். அவரும் அணியில் விளையாட முடியாத நிலையில் ஒரு முனையில் ஜடேஜாவை லெக் திசையில் பந்து வீசச் செய்து, லெக் திசையில் ஃபீல்டர்கலை பேக் செய்வது அறிவுபூர்வமான கேப்டன்சியாகத் தெரியவில்லை.
மொகமட் ஷமி சுத்தமாக ஒரு சாதாரண பவுலராக வீசுகிறார். அவருக்கு என்னவாயிற்று என்பது பற்றி பயிற்சியாளரோ, தோனியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஹஷிம் ஆம்லா போன்ற வீரரையே பவுன்சர் போட்டு வீழ்த்த முடிந்த ஷமி இங்கிலாந்தில் இந்தத் தொடரில் படுமோசமான லைன் மற்றும் லெந்த்தில் வீசி வருகிறார். இஷாந்த் இல்லாத தருணத்தில் ஷமியை ஆக்ரோஷமாக வீசுமாறு தோனி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்தமாதிரி தெரியவில்லை.
புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கை ஒரு முனையில் பவுன்சர் வீசச் செய்து அவரையும் விரயம் செய்ததுதான் தோனியின் சாதனையாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து வருகிறது.
ஒரு முனையில் ஸ்ட்ரைக் பவுலர் ஒருவர் கூட இல்லாத நிலையில் ஜடேஜாவை வைத்து அட்டாக் செய்திருக்க வேண்டும் தோனி. நெருக்கமாக பீல்டிங்கை நிறுத்தி பேட்ஸ்மென்களை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்திருக்க வேண்டும் தோனி. ஆனால் துளி கூட கற்பனா சக்தியே இல்லாத கேப்டனாக இருக்கிறார் தோனி.
அதுவும் ஆட்டம் நம் கையை விட்டுப் போகும் தருணங்களில் அவரது கற்பனை வறட்சி தூக்கலாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் ஜடேஜா 58 ஓவர்கள் வீசி 138 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் அது டர்பனில் உள்ள வழக்கமான பிட்ச் அல்ல. துணைக் கண்ட பிட்ச் போல் இருந்தது என்ற விமர்சனம் அப்போதும் எழுந்தது. அடுத்ததான நியூசிலாந்து தொடரில் 2 டெஸ்ட்டில் ஜடேஜா வெறும் 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். சுமார் 178 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் 80 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்தத் தொடரில் சுமார் 158 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவரை அணியில் வைத்த்திருக்க ஏதாவது நியாயம் உள்ளதா? பேட்டிங் ஆடுகிறாரே என்று கேட்கலாம். அதை அஸ்வினும் செய்ய முடியும்.
மேலும் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர் என்றால் இப்போதைக்கு அஸ்வின் மட்டுமே. அவரை தொடர்ந்து அயல்நாடுகளில் உட்கார வைப்பதும் தவறான அணுகுமுறையே.
மறுபடியும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் ஜடேஜாவை விட அயல்நாட்டுப் பிட்ச்களில் சிறந்தவர் என்று கூற வரவில்லை. மாறாக அவரிடம் பல்வேறு விதமான பந்து வீச்சுக்கள் உள்ளன. கேரம் பால், தூஸ்ரா, மற்றும் லைன், லெந்த், பிளைட், டிரிஃப்ட் என்று அவர் கைகளில் வினோதங்கள் உள்ளன.
அவரிடம் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் அதிகம். ஜடேஜா மிகவும் ஃபிளாட்டான ஒரு பவுலர். ஆகவே ஜடேஜா என்ற பலவீனத்திலிருந்து தோனி வெளிவருவது அவசியம்.
இங்கிலாந்து அணியில் ஒருமுறை கீத் மில்லர் என்ற ஸ்பின்னர் விக்கெட்டுகளை எடுக்காமல் பேட்டிங்கில் சதம் எடுத்தார். ஆனால் சதம் எடுத்ததற்காக அவரை அணியில் இங்கிலாந்து வைத்துக் கொள்ளவில்லை. அடுத்த டெஸ்டில் அவரை அணியிலிருந்து நீக்கியது. ஏனெனில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக அவரை எடுத்தனர் ஆனால் பேட்டிங்கில் சதம் எடுத்தார். அது தேவையில்லை என்று இங்கிலாந்து கருதியது. இதுதான் சிறந்த அணுகுமுறை.
கேப்டன்சி கலை என்பது வெறும் வெற்றிகள், தோல்விகளை வைத்து எடைபோடப்படுவதல்ல, கிரிக்கெட் வரலாறு, பாசிடிவ் அணுகுமுறை, சாதுரியம், விஷயங்கள் சாதகமாக இல்லாதபோது சாதகத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான உத்திகள் ஆகியவற்றை ஒரு கேப்டன் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பற்றியது.
இந்தப் பகுதிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டியின் முழுமையான சவால்களைச் சந்திக்க தோனி இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது என்பதையே அவரது அணுகுமுறை காட்டுவதாக கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago