“நல்ல வேளை நான் பவுலர் இல்லை” - ரோகித், கோலியை போற்றும் நெதர்லாந்து பேட்ஸ்மேன்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45-வது போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார் நெதர்லாந்து பேட்ஸ்மேன் மேக்ஸ் ஓ'டவுட்.

“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள். அவர்கள் இருவரும் தங்கள் ஆட்டத்தால் எதிரணியை அச்சுறுத்தும் திறன் கொண்டவர்கள். நல்ல வேளையாக அவர்களுக்கு பந்து வீசும் பவுலராக நான் இல்லாமல் போனேன். இருந்தாலும் நாங்கள் அவர்களை விரைந்து வெளியேற்றுவோம் என நம்புகிறேன்.

இந்த தொடரில் மிகவும் வலுவான அணி இந்தியா. பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் சிறந்த அணி. 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் குல்தீப், ஜடேஜாவின் சுழலை நாங்கள் சமாளிக்க வேண்டும். தீபாவளி தினத்தன்று அவர்களுடன் நாங்கள் விளையாடுகிறோம். எங்களது அடிப்படை திட்டங்களை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம்” என மேக்ஸ் தெரிவித்தார்.

இந்தப் போட்டிக்கு பின்னர் வரும் 15-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE