“இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியுள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே அமையக்கூடும். ஏனெனில், கடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நியூஸிலாந்து வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் இலக்கை துரத்தும் போது 284 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது கைகூடாமலே போகக்கூடிய சூழ்நிலை உள்ளது.

இதனிடையே, இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம், இந்தியாவில் தங்கள் அணிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசினார். அதில், "உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவில் இருந்து எங்களுக்கு நிறைய அன்பும் ஆதரவு கிடைத்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் இந்திய ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடரில், என்னால் நல்ல முடிவை பெற முடியவில்லை என்பது உண்மைதான். தனிப்பட்ட முறையில் சதம் அடிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், பேட்டிங்கில் நல்லபடியாக பினிஷ் செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதும், அணிக்கு உதவும் செயல்திறன் இருக்க வேண்டும் என்பதும் தான் முக்கியமான விஷயம். இத்தொடரில் மெதுவாகவும் விளையாடியுள்ளேன். சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாகவும் விளையாடியுள்ளேன். என்னை பொறுத்தவரை அணிக்கு என்ன தேவையோ அதற்கேற்ப விளையாட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE