அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அரை இறுதிக்குதகுதி பெற்று விட்டது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பெற்ற 6 வெற்றிகளும் முதலில் பேட் செய்த ஆட்டங்களில் கிடைக்கப் பெற்றதாகும். நெதர்லாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணிஇலக்கை துரத்திய நிலையில் தோல்விகளை சந்தித்தது.
இதில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 327 ரன்கள் இலக்கை துரத்திய போது 83 ரன்களில் ஆட்டமிழந்து 243 ரன்களில் படுதோல்வி அடைந்தது. இலக்கை துரத்தும் போதுஏற்படும் தடுமாற்றங்களை அரை இறுதி சுற்றுக்கு முன்னதாக சரி செய்து கொள்வதில் தென் ஆப்பிரிக்க அணி கவனம் செலுத்தக்கூடும். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்குஎதிரான இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தனது செயல் திறனை பரிசோதித்து பார்க்கக்கூடும் என கருதப்படுகிறது.
ஹஸ்மதுல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்துகடைசி அணியாக அரை இறுதிக்குள் நுழைவதை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டதால் ஆப்கானிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக நிறைவு செய்வதில் முனைப்புக் காட்டக்கூடும்.
நடப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதிர்ச்சி அடைந்த அணியாக மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
அந்த ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி கிளென் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்தால் துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியை சந்தித்தது.இதயத்தை நொறுக்கிய இந்த தோல்வியில் இருந்து மீண்டு இன்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெறுவதில் ஆப்கானிஸ்தான் அணி முனைப்பு காட்டக்கூடும். இலக்கை துரத்தும் போது தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணியின் பலவீனங்களை இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த பல ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சே ஆப்கானிஸ்தான் அணிக்கு கைகொடுத்து வந்துள்ளது. ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சிலும் அந்த அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஓவர்களில் நவீன் உல் ஹக், ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
பலவீனமாக இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கும் தொடரின் பிற்பாதியில் வேகமெடுத்துள்ளது. இப்ராகிம் ஸத்ரன், ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி ஆகியோர் முதலில் பேட்டிங் செய்யும்போதோ அல்லது சேஸிங் செய்யும்போதோ சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்து செயல்படத் தொடங்கியது வலுசேர்ப்பதாக உள்ளது. தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ், சீனியர் ஆல்ரவுண்டர் மொகமது நபி ஆகியோரிடம் இருந்து மட்டுமே பெரிய அளவிலான பேட்டிங் வெளிப்படாமல் உள்ளது. இவர்களும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago