“இது ஐசிசி உலகக் கோப்பை, உள்ளூர் போட்டி அல்ல” - பாகிஸ்தான் முன்னாள் வீரருக்கு ஷமி பதிலடி

By செய்திப்பிரிவு

மும்பை: "இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா கூறிய கருத்துக்கு இந்திய வீரர் மொகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 33-வது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட் செய்த இலங்கை 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொகமது ஷமியின் 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட் என இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். இந்தப் போட்டிக்கு பிறகு இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், சோயப் அக்தர் உட்பட பல முன்னாள் வீரர்களும், இந்தியாவின் ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய மூவர் இணையை கொண்டாடியுள்ளனர்.

அதேவேளையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டின் முன்னாள் வீரர் ஹசன் ராசா, “இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை சோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளில் இருந்து மட்டும் அதிக ஸ்விங் மட்டும் ஸீம் கிடைக்கிறது. ஷமி மற்றும் சிராஜ் இருவரும் ஆலன் டொனால்ட் மற்றும் மகாயா நிடினி போல் பந்துவீசுகின்றனர். ஷமியின் பந்துவீச்சில் ஏற்பட்ட ஸ்விங் குறித்து மேத்யூஸ் கூட ஆச்சரியப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது. அல்லது பிசிசிஐ தனது வீரர்களுக்கு உதவிவருகிறது என நினைக்கிறேன். இதில் மூன்றாவது நடுவரின் தலையீடும் இருக்கலாம்" என இந்தியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனினும், தொடர்ந்து இதேபோன்று கருத்தை அவர் தெரிவித்தார். இதனிடையே, ஹசன் ராசாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் மொகமது ஷமி கருத்து பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் மற்றவர்களின் வெற்றியை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இது ஐசிசி உலகக் கோப்பை. உள்ளூர் போட்டி ஒன்றும் அல்ல. நீங்களும் ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்தீர்கள், இல்லையா?. வாசிம் அக்ரம் எல்லாவற்றையும் விளக்கியபோதும், உங்களுக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் சொந்த நாட்டின் வீரர் வாசிம் அக்ரமைக் கூட நீங்கள் நம்பவில்லை. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற பொருத்தமற்ற விஷயங்களையோ அல்லது முட்டாள்தனத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார் ஷமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE