அனைத்து ஃபார்மெட்களிலும் நம்பர் ஒன்... - சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்!

By செய்திப்பிரிவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. ஓர் அணியாக, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என மூன்று ஃபார்மெட்களிலும் இந்திய அணியே முதலிடத்தை அலங்கரித்துள்ளது. அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸமை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். சச்சின், தோனி மற்றும் விராட் கோலிக்கு பின் உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற நான்காவது இந்திய வீரர் கில். இதே பட்டியலில் தற்போது விராட் கோலி நான்காம் இடத்திலும், ரோகித் சர்மா 6வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் மொகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தியன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் சிராஜ். இவரைத் தவிர இந்தியாவின் குல்தீப் யாதவ் 4-ம் இடம், பும்ரா 8-ம் இடம், மொகமது ஷமி 10-ம் இடம் பிடித்துள்ளனர்.

டி20 ஃபார்மெட்டில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினும், நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பிடித்துள்ளனர். எனினும், டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானும், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனும், டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE