“நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்!” - மேக்ஸ்வெல் இரட்டை சதத்தை புகழ்ந்த சச்சின்

By ஆர்.முத்துக்குமார்

க்ளென் மேக்ஸ்வெலை ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராக உயர்த்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அவரின் அதிரடி இரட்டை சதம் ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களிலேயே ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. காரணம், 91/7 என்ற நிலையிலிருந்து கம்மின்ஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு சதைப்பிடிப்பு அடிக்கடி தாக்க நகர முடியாமல் ஓட முடியாமல் ஓர் இடத்தில் நின்ற படியே சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் மட்டுமே விளாசி ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு இட்டுச்சென்ற அதியற்புத இரட்டை சதமாகும் அது.

இறுதியில் 128 பந்துகளில் 201 நாட் அவுட் என்று முடிந்தார் மேக்ஸ்வெல். இதில் 21 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள், அதாவது 31 பந்துகளிலேயே 144 ரன்கள். அப்படியென்றால் என்ன அடி என்பதை பார்க்காதவர்கள் ஊகித்தறியலாம். இந்த இன்னிங்ஸில் அவர் தகர்த்த சாதனைகளில் சில: 1.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோர் இது. | 2. ஐந்தாம் நிலையிலோ அல்லது அதற்கும் கீழ் இறங்கியோ 200 ரன்களை விளாசுவது முதல்முறை. | 3. ரன் சேஸில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம். இதுவரை அடித்த இரட்டை சதங்களெல்லாம் முதலில் பேட் செய்தபோது வந்தவையே. | 4.ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர். | 5.ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிவேக 200.

இந்த இன்னிங்ஸை பார்த்த அனைவருமே அரண்டு போய்விட்டனர். ஆனால், இந்த வெற்றிக்கும் பாராட்டுக்களுக்கும் ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மானுக்குதான் மேக்ஸ்வெலும் ஆஸ்திரேலியாவும் நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம் அவர்தான் ஷார்ட் பைன் லெக்கில் கிடைத்த எளிதான கேட்சை கோட்டைவிட்டார். மேக்ஸ்வெலுக்கு மொத்தம் 2 கேட்சுகள் விடப்பட்டன. அதில் ஒன்று சற்றே கடினமானது. அதையும் ரஷீத் கான் முயன்றிருந்தால் பிடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் வேறொரு பீல்டர் முயற்சித்ததால் தோல்வியில் முடிந்தது. இந்த இன்னிங்ஸை ஆஸ்திரேலிய ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில்ல், “மேக்ஸ் பிரஷரிலிருந்து மேக்ஸ் பெர்பார்மன்ஸ். நான் என் வாழ்நாளில் பார்த்த ஆகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுவே” என்று பாராட்டியுள்ளார்.

மேக்ஸ்வெலின் நேற்றைய இன்னிங்ஸ் பாராட்டுக்கு தகுதியானவையே என்றாலும், 1983 உலகக் கோப்பையில் பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் ஜிம்பாப்வே என்னும் அப்போது வலுவாக இருந்த அணிக்கு எதிராக 17/5 என்ற நிலையிலிருந்து 138 பந்துகளில் 175 ரன்களை விளாசிய கபில் தேவின் அந்த இன்னிங்ஸைவிட மேக்ஸ்வெல்லின் இந்த இன்னிங்ஸ் பெரிய இன்னிங்ஸ் ஆகுமா என்பது பட்டிமன்ற விவாதத்திற்குரியது.

91/7 என்ற நிலையிலிருந்து 291 ரன்களை விரட்டி இரட்டை சதம் எடுத்தார் மேக்ஸ்வெல் அதுவும் அவர் சுத்தமாக நகர முடியாமல் ஓட முடியாமல் ஆடியதால் பெரிய இன்னிங்ஸாக கருதப்படுகிறது. நின்ற இடத்திலேயே இருந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசினார். அவரின் திறமையில் சந்தேகமில்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் நல்ல யார்க்கர் வீசாக்கூடிய பவுலர்கள் இல்லாதது மேக்ஸ்வெலின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் போனதுக்கு காரணமாக அமைந்தது எனலாம். ஒருவேளை நல்ல யார்க்கர் பவுலர்கள் இருந்திருந்தால் மேக்ஸ்வெல் ஓட முடியாமல் நகர முடியாமல் இப்படிப்பட்ட இன்னிங்ஸை ஆடியிருப்பாரா என்பது ஐயமே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE