“7 விக்கெட்களை இழந்தபோதும் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன்” - இரட்டை சத நாயகன் மேக்ஸ்வெல்

By செய்திப்பிரிவு

மும்பை: ஆப்கன் அணிக்கு எதிராக அபார வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா. தோல்வியின் பிடியில் இருந்து ஆப்கன் வசம் இருந்த வெற்றியை பறித்தது ஆஸி. இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார் மேக்ஸ்வெல்.

“நாங்கள் ஃபீல்ட் செய்த போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. வெப்பத்தால் நான் அதிகம் உடற்பயிற்சி செய்யவில்லை. சரிவில் இருந்த போதும் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன். எங்களது பேட்டிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் எனது வழக்கமான ஷாட்களை ஆட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். சான்ஸே இல்லாத இந்த இன்னிங்ஸை ஒரு சான்ஸ் எடுத்து பார்த்து ஆடியதில் மகிழ்ச்சி. அது எனக்கு பெருமையாக உள்ளது. எங்கள் அணிக்கு நம்பிக்கை அதிகம். இந்த ஆட்டத்தின் மூலம் அது மேலும் உயர்ந்துள்ளது” என மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

128 பந்துகளில் 201 ரன்களை மேக்ஸ்வெல் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்களை பதிவு செய்துள்ள வீரர்களில் 3-வது இடம் (இதுவரை 43 சிக்ஸர்), ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டிய போது அதிக ரன்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 3-வது இடம் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE