ODI WC 2023 | பழைய பன்னீர் செல்வமா வெகுண்டெழுந்த ஆஸி. - அரை இறுதிக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பழைய பன்னீர் செல்வமாக வெகுண்டெழுந்துள்ளது ஆஸ்திரேலியா. 7 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என்ற நிலையில் இருந்து மேற்கொண்டு ஒரு விக்கெட் கூட இழக்காமல் 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அதற்கு பிரதான காரணம் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டம்.

கிட்டத்தட்ட ஆப்கன் அணிக்கு எதிராக ஆட்டத்தை ஆஸ்திரேலியா இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்திருந்தால் அரையிறுதிக்கான ரேஸில் ஆப்கன் இருந்திருக்கும். ஆனால், அது அனைத்தையும் மாற்றினார் மேக்ஸ்வெல். 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தார். அது பார்க்க பழைய ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் போல இருந்தது. இனி இந்தப் போட்டியில் வெல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழலில் இருந்து வெற்றி பெறுவது போல இந்த ஆட்டம் அமைந்திருந்தது.

“இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. இது மிகப்பெரிய வெற்றியாகும். மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி இருந்தார். அமைதியாக இருந்தார். அவர் வசம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும். 200 ரன்கள் பின்தங்கி இருந்த போதும் ஆட்டத்தில் வெல்ல முடிந்தது அசாத்திய நிகழ்வு. தசை பிடிப்பு காரணமாக மேக்ஸ்வெல் திரும்பினால் எங்களுக்கு சில ஆப்ஷன் இருந்தது. ஸாம்பா தயாராக இருந்தார். ஆனால், மேக்ஸ்வெல் வெளியேறவில்லை. எந்த சூழலில் இருந்தாலும் வெல்ல முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியது அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு கம்மின்ஸ் தெரிவித்தார். 68 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

“மேக்ஸ்வெல்லுக்கு முதுகுப் பகுதியில் பிரச்சினை இருந்தது. அதன் காரணமாக அவர் வலியால் துடித்தார். ஆனால், தனது செயல் மூலம் ஆஸ்திரேலியன் என்பதை அவர் நிரூபித்தார். காயம் என சொல்லி அவர் வெளியேறவில்லை. வெற்றிக்காக களத்தில் போராடினார்” என ஆஸ்திரேலிய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“மேக்ஸ்வெல் எனும் ஒற்றை வீரர் அனைத்தையும் மாற்றினார். ஆப்கானிஸ்தான் அணியால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரது பேட் செய்த விதம் அபாரம்” என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE