மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்: 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் வென்று மதுரை மாணவிகள் சாதனை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சென்னையில் நடந்த கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவிகள் பங்குபெற்று 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வாக்கோ இந்தியா தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் பெண்களுக்கான கேலோ இந்தியா கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீராங்கனையர் பங்கேற்றனர். பாயின்ட் ஃபைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், மியூசிக்கல் ஃபார்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரையைச் சேர்ந்த மாணவிகள் பங்குபெற்று 2 தங்கம் , 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

கிக் லைட் பிரிவில் தங்கப் பதக்கம், பாயின்ட் ஃபைட்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை மோஷிகா நாச்சியார் வென்றார். பாயின்ட் ஃபைட்டிங் மற்றும் லைட் காண்டாக்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம், மியூசிக்கல் ஃபார்மில் வெள்ளிப் பதக்கத்தை ஹர்ஷினி ஸ்ரீ வென்றார். கிரியேட்டிவிட்டி ஃபார்மில் வெண்கலப் பதக்கத்தை ஓபெக்‌ஷா ஜெயின் வென்றார்.

புல் கான்டக்ட் பிரிவில் தங்கப் பதக்கத்தை நித்திய மீனாட்சி வென்றார். கிக் லைட் பிரிவில் வெள்ளி பதக்கம், லைட் காண்டாக்ட் பிரிவில் வெண்கல பதக்கத்தை சிவ தர்ஷினி வென்றார். வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் தலைவர் நாராயணன், பொதுச் செயலாளர் பிரகாஷ் குமார், பயிற்சியாளர்கள் கார்த்திக் மற்றும் சந்திரா ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE