“என் ஹீரோ சச்சின்... நான் ஒருபோதும் அவர் தரத்தை எட்ட முடியாது” - விராட் கோலி

By ஆர்.முத்துக்குமார்

ஈடன் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை எடுத்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, தான் ஒருபோதும் என் ஹீரோ சச்சின் டெண்டுல்கரின் தர அளவுக்கு சமமாக முடியாது என்று தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், சச்சின் இவ்வளவு சதங்களை எடுக்க 450-க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டபோது, விராட் கோலி 300-க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் 49வது சதத்தை எட்டியுள்ளார். மேலும், விரட்டலில் விராட் கோலியை அடித்துக்கொள்ள உலக அளவில் ஆள் கிடையாது என்பதுதான் அனைவரும் கோலியை உச்சத்தில் கொண்டு வைப்பதற்குக் காரணம். நேற்று அடித்தது கோலியின் நல்ல சதம் அல்ல என்பது வேறு கதை. ஏனெனில், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு படுமோசத்திலும் மோசம்.

லுங்கி இங்கிடி வேண்டுமென்றே அப்படி வீசினாரா என்று தெரியவில்லை. ஒரே ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசித்தள்ளினார். படுமட்டமான பவுலிங், யான்சென் எப்போதும் நன்றாக வீசுபவர் 3-வது ஸ்லிப்பிற்கும், லெக் திசையில் பைன் லெக்கிற்கும் பந்து வீசுகிறார். ஷம்சி மற்ற இந்திய வீரர்களுக்கு சுமாராக வீசினார். ஆனால் கோலிக்கு வீசும்போது மட்டும் லெக் திசையில் ஷார்ட் பிட்ச் ஆக வீசி அடிச்சுக்கோ என்பது போல் வீசினார். ஆனால் கோலியால் கனெக்ட் செய்ய முடியவில்லை. ஆகவே, மோசமான பந்து வீச்சிற்கு எதிராக 70-80 பந்துகளில் சதம் அடிக்க வேண்டிய கோலி நேற்று மோசமான பந்து வீச்சிலும் வசதியான களவியூகத்திலும் கூட 121 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். இதில் சிக்சர்களே இல்லை என்பது ஆச்சரியம் என்பதை விட கோலி நேற்று நல்ல ரிதத்தில் ஆடவில்லை என்பதையே காட்டுகிறது.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு கோலி விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற கொள்கையே இல்லாமல் இருந்தது கண்கூடு. இந்தப் பந்துவீச்சிலும் கோலி சில பந்துகளில் பீட்டன் ஆனார். ரன்கள் எடுக்கத் திணறினார் என்பதால்தான் இது கோலியின் சிறந்த சதம் அல்ல. ஆனால், 49-வது சதம், சச்சின் என்னும் லெஜண்டின் சதத்தை சமன் செய்த இன்னொரு லெஜண்ட் கோலி. ஆகவே, இது முக்கியத்துவம் வாய்ந்த சதம். இந்தச் சதம் பற்றி கோலி கூறியதாவது:

“இது ஒரு பெரிய போட்டி, இந்தத் தொடரில் சிறந்த அணியாக ஆடிவரும் தென் ஆப்பிரிக்காவுடன் மோதினோம். அவர்கள் பிரமாதமாக ஆடி வருவதால்தான் அவர்களுடன் ஆடுவது என்னில் ஆர்வத்தைத் தூண்டியது. என் பிறந்த நாளில் இந்த சதம் அமைந்ததால் இதை எனக்கு ரசிகர்கள் சிறப்பாக்கியுள்ளனர். அதாவது இன்று கூடுதலாக என்னவோ நடக்கப் போகிறது என்று நினைத்தேன். இது உலகக் கோப்பையில் இன்னொரு போட்டி மட்டுமல்ல என்ற உணர்வு எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. ஆம்! உற்சாகத்துடன் தான் காலை கண் விழித்தேன்.

சச்சின் பாஜியின் வாழ்த்துகளை இப்போது எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய ஹீரோ சச்சின், அவரது சாதனையை சமன் செய்வது என்பது எனக்கு மிகப் பெரிய கவுரவம். அனைவருக்கும் ஒப்பிடுவது பிடிக்கும், ஆனால் நான் அவருடன் ஒப்பிடத் தகுந்தவன் அல்ல, அவரது தரத்துக்கு சமமானவன் அல்ல. ஏன் அவரை நாம் சிந்திக்கிறோம் என்றால் அவர் ஒரு துல்லிய பேட்டர். நான் என்னால் முடிந்தவரை ஆடுகிறேன் அவ்வளவே. ஆட்டத்தை நாட்டுக்காக வெற்றி பெறச் செய்கிறேன். என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர்தான் என் ஹீரோ என்பது மட்டும் மாறப்போவதில்லை.

எனக்கு இந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிவயமான தருணம். நான் எங்கிருந்து வருகிறேன் என்று எனக்குத் தெரியும், அவர் ஆடுவதை தொலைக்காட்சியில் கண்டு களித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எனவே, இன்று இங்கு நான் இருந்துகொண்டு அவரிடம் இருந்து ஒரு பாராட்டுப் பத்திரம் பெறுகிறேன் என்பது எனக்கு பெரிய பெரிய விஷயமாகும்” என்றார் விராட் கோலி.

இதுவரை 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி 8 போட்டிகளில் 2 சதங்கள், 4 அரைசதங்களை எடுத்துள்ளார். குவிண்டன் டி காக் முதலிடம் வகிக்க, கோலி 2-ம் இடத்தில் 543 ரன்களுடன் இருக்கிறார். 108.60 சராசரி. ஸ்ட்ரைக் ரேட் 88.29. ஒருநாள் உலகக் கோப்பையில் முதன்முதலாக 500 ரன்களைக் கடக்கிறார் விராட் கோலி. இந்த ஆண்டு 5 சதங்களுடன் 1000 ரன்களுக்கும் மேலாக எடுத்துள்ளார். சராசரி 72.18. ஸ்ட்ரைக் ரேட் 99.82. ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுப்பது கோலியின் 8-வது முறையாகும்.

இது குறித்து கோலி கூறும்போது, “கடவுள் எனக்கு மீண்டும் மகிழ்ச்சியைப் பரிசாகத் தந்துள்ளார். நடுவில் சறுக்கல் ஏற்பட்டாலும் மீண்டும் நான் முன்பு செய்ததை தொடர்ந்து செய்யுமாறு எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE