“காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும்” - இர்பான் பதான் உருக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: "உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும்" என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரினால் காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், போர் மென்மேலும் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனிடையே, காசாவில் போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்றைய நாள் நிலவரப்படி, காசாவில் உயிரிழந்தோர்கள் எண்ணிக்கை மொத்தமாக 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள் மற்றும் 2,326 பெண்கள். பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2,600 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 1,150 குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போரின் பெயரால் காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இர்பான் பதான், "ஒவ்வொரு நாளும், காசாவில் 0-10 வயதுடைய அப்பாவி குழந்தைகள் உயிர்களை இழந்து வருகிறார்கள். ஆனால், உலகம் அமைதியாக இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக, என்னால் பேச மட்டுமே முடியும். உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த முட்டாள்தனமான கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரமிது" என்று ஐக்கிய நாடுகள் சபையை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE