“இந்திய பவுலர்களுக்கு ஐசிசி ஸ்பெஷல் பந்துகளை கொடுக்கிறது” - பாக். முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: "இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 33-வது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 92, விராட் கோலி 88, ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது பேட் செய்த இலங்கை 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொகமது ஷமியின் 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட் என இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். இந்தப் போட்டிக்கு பிறகு இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், சோயப் அக்தர் உட்பட பல முன்னாள் வீரர்களும், இந்தியாவின் ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய மூவர் இணையை கொண்டாடியுள்ளனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா இந்தியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹசன் ராசா, “இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை சோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளில் இருந்து மட்டும் அதிக ஸ்விங் மட்டும் ஸீம் கிடைக்கிறது. ஷமி மற்றும் சிராஜ் இருவரும் ஆலன் டொனால்ட் மற்றும் மகாயா நிடினி போல் பந்துவீசுகின்றனர். ஷமியின் பந்துவீச்சில் ஏற்பட்ட ஸ்விங் குறித்து மேத்யூஸ் கூட ஆச்சரியப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியாவுக்கு வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து உதவி செய்கிறது. அல்லது பிசிசிஐ தனது வீரர்களுக்கு உதவிவருகிறது என நினைக்கிறேன். இதில் மூன்றாவது நடுவரின் தலையீடும் இருக்கலாம்" எனக் கூறினார்.

ஹசன் ராசாவின் கருத்துகளை 'அபத்தம்' என விமர்சித்துள்ளனர் முன்னாள் வீரர்கள் பலரும். முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹசன் ராசா பேசிய வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து, "உண்மையில் இது கிரிக்கெட் நிகழ்ச்சிதானா... அல்லது காமெடி நிகழ்ச்சியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE