‘சாதனை மன்னன்’ ஷமியும், 45 விக்கெட்டுகளும்: ஐசிசி பகிர்ந்த சிறப்பு வீடியோ | ODI WC 2023

By செய்திப்பிரிவு

மும்பை: உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ‘சாதனை மன்னன்’ மொகமது ஷமியை கொண்டாடும் விதமாக, அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியன்மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அதிக முறை 4+ விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையும் ஷமி படைத்தார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் உடன் இந்த சாதனையை சமன் செய்தார் ஷமி.

மேலும், இந்திய அணி சார்பில் அதிக முறை ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஷமி. ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா மூன்று முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த நிலையில், ஷமி நான்கு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

அதேபோல், உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் மொகமது ஷமி. இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் உலகக் கோப்பை போட்டிகளில் 44 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இன்று அதை முறியடித்த ஷமி உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜாகீர் கான் 23 போட்டிகளிலும், ஸ்ரீநாத் 33 போட்டிகளிலும் விளையாடி 44 விக்கெட்கள் எடுத்த நிலையில், ஷமி வெறும் 14 இன்னிங்ஸ்களிலேயே 45 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

நேற்றைய ஒரே போட்டியில் பல சாதனைகளை தகர்த்த மொகமது ஷமியை கொண்டாடும் விதமாக உலகக் கோப்பை தொடர்களில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் ஷமி வீழ்த்திய 45 விக்கெட்டுகள் வீடியோ இடம்பெற்றுள்ளன. தற்போது இது வைரலாகி வருகிறது.

Loading...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE