மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிஉள்ள 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 12 புள்ளிகளுடன் பட்டியிலில் 2-வது இடத்தில் உள்ளது. வீழ்த்த முடியாத அணியாக வலம் வரும் இந்திய அணி குறிப்பிட்டத்தக்க போராட்ட குணங்களை வெளிப்படுத்தி சாம்பியன் அணிக்கு உண்டான பண்புகளையும் வெளிப்படுத்தி உள்ளது.
தன்னம்பிக்கையும், திறன்கள் மீதான நம்பிக்கையும் இந்திய வீரர்களிடம் மேலோங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடை பெற்ற ஆட்டத்தில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போது மட்டை வீச்சில் காட்டிய துணிச்சலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 229 ரன்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட போது பந்து வீச்சில் காணப்பட்ட ஆக்ரோஷமும் இதற்கு சிறந்த சான்று.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து சிதைந்து போகும் அளவுக்கு பந்து வீச்சில் தாக்குதல் தொடுத்தது இந்திய அணி. இதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்றால் செயல் திறனின் வரம்பை கணிசமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை எதிரணிகளுக்கு உருவாகி உள்ளது.
» கணை ஏவு காலம் 22 | முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
பேட்டிங்கை பொறுத்தவரையில் 66.33 சராசரியுடன் ஒரு சதம், 2 அரைசதம் என398 ரன்கள் குவித்துள்ள, ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி,சச்சினின் சொந்த மைதானத்தில் அவரது 49 சதங்கள் சாதனையை சமன் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி, நடப்பு தொடரில் ஒரு சதம், 3 அரை சதம் உட்பட 354 ரன்கள் சேர்த்துள்ளார். இதேபோன்று நடுவரிசையில் கே.எல்.ராகுலும் உரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.
ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர்ஆகிய இருவரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திதான் உலகக் கோப்பை தொடருக்குள் நுழைந்தனர். ஆனால் தற்போது இவர்களிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. டெங்கு காய்ச்சல் காரணமாக முதல் இரு ஆட்டங்களிலும் விளையாடாத ஷுப்மன் கில் அதன் பின்னர் பங்கேற்ற 4 ஆட்டங்களில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.
எளிதான முறையில் அவர், விக்கெட்டை பறிகொடுப்பது தொடர் கதையாகஉள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்க கில் முயற்சி செய்யக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர் 6 ஆட்டங்களில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். ஷார்ட் பால் பந்து வீச்சில் அவருக்கு உள்ள பலவீனத்தை எதிரணிகள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன. பெரிய அளவில் பேட்டிங் செய்துஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதற்கான வாய்ப்புகள் பலமுறை கிடைத்த போதிலும் அதனை ஸ்ரேயஸ் ஐயர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நாக் அவுட் சுற்று நெருங்கி வரும் நிலையில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறார் ஸ்ரேயஸ் ஐயர். எனினும் தனது சொந்த மைதானத்தில் முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள அவரிடம் இருந்து சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க சூர்யகுமார் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் 49 ரன்கள் சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றக்கூடும்.
பந்து வீச்சில் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஜஸ்பிரீத் பும்ரா, இரு ஆட்டங்களில் விளையாடினாலும் 9 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள மொகமது ஷமி ஆகியோர் இலங்கை அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சுழலில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். மொகமது சிராஜும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.
சிராஜ் இந்தத் தொடரில் 6 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார். மேலும் ஓவருக்கு சராசரியாக 5.85 ரன்கள விட்டுக்கொடுத்துள்ளார். எனினும் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியை 50 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ததில் சிராஜ் முக்கிய பங்கு வகித்திருந்தார். அந்த ஆட்டத்தில் 6 விக்கெட்களை வேட்டையாடி இருந்த சிராஜ், அதே போன்று உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
இலங்கை அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தகுதி சுற்றில் அற்புதமாக விளையாடிய அந்த அணி தற்போது தடுமாறிவருகிறது. வீரர்களின் காயம், முன்னணிவீரர்கள் உடற்தகுதியால் பங்கேற்காதது உள்ளிட்டவை அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்துள்ளது. அதேவேளையில் கிடைத்துள்ள வாய்ப்பை இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தினால் தொடரை கணிசமான வெற்றிகளுடன் நிறைவு செய்ய முயற்சிக்கலாம்.
தலா ஒரு சதம், அரை சதத்துடன் 331 ரன்கள் சேர்த்துள்ளது சதீரா சமரவிக்ரமாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்தஇன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஷுப்மன் கில்லுக்கு பிறகு இந்த இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள பதும், நிஷங்கா (1,108),குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியில் போதிய அனுபவம் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு இந்திய பேட்டிங் வரிசை சவால் அளிக்கக்கூடும்.
12 வருடங்களுக்குப் பிறகு: உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இதே மைதானத்தில்தான் கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. அந்த ஆட்டத்தில் தோனி விளாசிய சிக்ஸர் உதவியுடன் இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அதே மைதானத்தில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே தற்போதைய அணியிலும் உள்ளனர்.
அந்த தொடரில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகீர்கான் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதேவேளையில் இலங்கை அணியில் விளையாடிய எந்த வீரரும் தற்போதைய அணியில் இல்லை. ஆனால் அன்றைய இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஜெயர்த்தனே தற்போது இலங்கை அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago