ஆப்கன் அணியின் வெற்றிக்கு பின்னால் இரு இந்தியர்கள்

By செய்திப்பிரிவு

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல் திறன் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியான இங்கிலாந்து மற்றும் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தியதன் மூலம் உலக கிரிக்கெட் அரங்கையே தன் பக்கம் ஈர்த்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணியானது 8 வருடங்களுக்குப் பிறகுகணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் செயல் திறனில் இரு இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒருவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, மற்றொருவர் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிலாப் மேவாடா.

இவர்கள் இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஜாம்நகரைச் சேர்ந்த அஜய் ஜடேஜா, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதேவேளையில் மெஹ்சானா நகரைச் சேர்ந்த மிலாப் மேவாடா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

1990-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக அறியப்பட்ட அஜய் ஜடேஜா தனது துடிப்பான ஃபீல்டிங், பயமற்ற பேட்டிங் மற்றும் கிரிக்கெட் களத்தில் எப்போதும் புன்னகைக்கும் நடத்தை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். 52 வயதான அவர், உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

நவாநகரின் அரச குடும்பத்தில் பிறந்த அஜய்ஜடேஜா, வளமான கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்டவர். ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி ஆகிய இரண்டு மதிப்புமிக்க முதல் தர கிரிக்கெட் தொடர் கோப்பைகளுக்கு அஜய் ஜடேஜாவின் உறவினர்களான ஜாம் ரஞ்சித்சின்ஜி மற்றும் துலீப்சின்ஜி ஆகியோரின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.

1992 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அஜய் ஜடேஜா இந்திய அணிக்காக 196 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,359 ரன்கள் குவித்திருந்தார். இதில் 6 சதங்கள், 30 அரை சதங்கள் அடங்கும். சில முறை இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பும் வகித்துள்ளார். அதேவேளையில் 15 டெஸ்ட்போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கி 576 ரன்கள் சேர்த்திருந்தார். 2000-ம் ஆண்டில் சூதாட்ட சர்ச்சையைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தடையை அஜய் ஜடோ எதிர்கொண்டார். எனினும் இந்த தடை 2003-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

மறுபுறம், மெஹ்சானாவில் உள்ள உன்ஜாவைச் சேர்ந்த மிலாப் மேவாடா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேவாடா, உள்ளூர் கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் 37 ஆண்டுகால அனுபவத்தை கொண்டவர். ஜம்மு-காஷ்மீர், ஹைதராபாத், சத்தீஸ்கர் மற்றும் வதோதரா போன்ற உள்ளூர் அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

மிலாப் மேவாடாவின் நிபுணத்துவமானது ஆப்கானிஸ்தான் வீரர்களின் தொழில்நுட்பம், தந்திரோபாயங்கள் மற்றும் மன வலிமையை மேம்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதுவே அந்த அணி வலுவான இலக்குகளை எளிதாக அடைய உதவுவதாக கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை வேறுபடுத்தி காட்டும் ஒரு முக்கிய அம்சம், உயர் அழுத்த சூழ்நிலைகளில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவதாகும். பதற்றமான தருணங்களில் கூட தங்கள் இயல்பான ஆட்டத்தை நிதானமாக வெளிப்படுத்தி தற்போது தொடரில் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அவர்களின் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களின் விலைமதிப்பு மிக்க பங்களிப்புகளுக்கு ஒரு சான்றாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE