வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை இன்று திறப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: சச்சினின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதற்கிடையே சச்சினை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்த மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் நாளை (2-ம்தேதி) மோதுகின்றன. இதையொட்டி இன்று சச்சினின் சிலை திறக்கப்பட உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

மட்டையை சுழற்றுவது போன்று அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகரைச் சேர்ந்த சிற்பிபிரமோத் காம்ப்ளே உருவாக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE