ODI WC 2023 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் - தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். எனினும், லிட்டன் தாஸ் 45 ரன்கள், மஹ்முதுல்லாஹ் 56 ரன்கள், ஷகிப் அல் ஹசன் 43 ரன்கள் என மூவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்களில் 6 பேர் ஒற்றை இலக்கங்களில் ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். அதிலும் ஓப்பனிங் வீரர் தன்சித் ஹசன் டக் அவுட் ஆனார். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இதனால், 45 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேசம் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அப்ரிடி மற்றும் வாசிம் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 205 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு சிறப்பான துவக்கம் இன்றைய போட்டியில் அமைந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இவர்கள் கூட்டணி 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. 68 ரன்களில் அப்துல்லா ஷபீக் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் பாபர் அஸம் 9 ரன்களில் அவுட் ஆனாலும், ஃபகார் ஜமான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 32.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரிஸ்வான் 26 ரன்களும், இப்திகார் அகமது 17 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாகிஸ்தான். தொடர்ச்சியாக அந்த 4 தோல்விகளை சந்தித்திருந்தது. வங்கதேசத்துடனான போட்டியைச் சேர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE