ODI WC 2023 | பாகிஸ்தான் அணியை ‘சோக்கர்ஸ்’ ஆக்கிய தென் ஆப்பிரிக்கா!

By ஆர்.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் வைத்த பெயர் ‘சோக்கர்ஸ்’. அதாவது ஜெயிக்க வேண்டிய போட்டியில் கடைசி நேரத்தில் சொதப்பி தோற்பவர்கள் என்ற பொருளில் ஸ்டீவ் வாஹ் அவர்களுக்கு 1999 உலகக் கோப்பை அரையிறுதித் தோல்விக்குப் பிறகு பெயர் வைத்தார். அதாவது, ‘ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை மூச்சுத் திணற தோற்பது’ என்பதைத்தான் ‘சோக்கர்ஸ்’ என்று அவர் குறிப்பிட்டார். நேற்று ஸ்டீவ் வாஹ் வாக்கு மீண்டும் ஒரு முறை பலித்து விடும் போல் இருந்தது. ஆனால், இந்த முறை ‘சோக்கர்ஸ்’ ஆனது பாகிஸ்தான் அணியே.

ஆம்! 250/7, 250/8 என்று வெற்றி பெறும் நிலைக்கு வந்த பாகிஸ்தான் முழுதும் பீல்டர்களை உள்ளே கொண்டு வந்து இங்கிடியை கழற்றியிருக்க வேண்டும். அல்லது மஹராஜை தூக்கி அடித்து வெற்றி பெற்றுக் கொள் நாங்கள் உனக்கு சிங்கிள்களைக் கொடுக்கப்போவதில்லை, வெற்றி பெற வேண்டுமென்றால் நீ ரிஸ்க் எடு என்று கள வியூகம் அமைப்பதற்குப் பதிலாக பாபர் அசாம், நிறைய சிங்கிள்களை 250/8 என்ற தருணத்திலிருந்து விட்டுக்க்கொடுக்கும் களவியூகத்தை அமைத்தார். எனவேதான் வெற்றி பெற வேண்டிய போட்டியைத் தோற்று ‘சோக்கர்ஸ்’ ஆயினர்.

ரசிகர்களின் மனோநிலை நேற்று இருதரப்புக்கும் சாதகமாகவே இருந்தது. ஆனால் ஒரு தரப்பினர் தென் ஆப்பிரிக்காதான் வெல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி பாவம். எல்லா உலகக்கோப்பைகளிலும் அவர்களுக்கு தவறு நடக்கிறது என்று இந்தத் தரப்பினர் கருத்து வைத்திருக்க, பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று விரும்பியவர்கள் ‘பாகிஸ்தான் இப்பத்தான் பாகிஸ்தான்காரர்கள் போல் ஆடுகிறார்கள்’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

ஆனால், தமிழ் வர்ணனையாளர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய போது ஆப்கானிஸ்தான் வெல்ல வேண்டும் என்று மனம் விரும்பி வர்ணனை செய்தனர். ஆனால் நேற்று தென் ஆப்பிரிக்கா தோற்க வேண்டும் என்று மனம் விரும்பி வர்ணனை செய்தனர். தென் ஆப்பிரிக்கா அடித்த ஒவ்வொரு பவுண்டரிக்கும் கடைசியில் எடுத்த ஒவ்வொரு சிங்கிளுக்கும் இவர்கள் வருத்தம் தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.

இதன் காரணம் என்னவெனில் ‘இந்தியா கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அதற்குப் போட்டியாக இருப்பது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளே’ என்பது இவர்களின் துணிபு. ஆகவேதான் இந்த அணிகளுக்கு எதிராக ‘ஐஸ்லாந்து’ போன்ற அணிகள் ஆடினாலும், ஐஸ்லாந்துதான் ஜெயிக்க வேண்டும் என்று வர்ணனை கூறும் ஒரு மனநிலையைக் கொள்கின்றனர்.

அன்று நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்க வேண்டும் என்று வேண்டி விரும்பி வர்ணனை செய்தார்கள். இங்கிலாந்து ஆப்கானிடம் தோற்றபோது அனைவருமே குஷியாயினர். இவர்களும் குஷியாயினர். அன்று நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று கருதவில்லை. ஆப்கான் வெற்றி பெற வேண்டும் என்று கருதியே வர்ணனை செய்தனர். நியூஸிலாந்துக்கு எதிராக ஆப்கான் வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்தது.

இந்திய அணி ஆடும்போது வேறொரு தளத்தில் உச்சபட்ச உற்சாகத்தில் எதிரணியை கிண்டலும் கேலியும் செய்கின்றனர் அல்லது கொச்சைப் படுத்துகின்றனர். இதே இந்திய அணி ஆப்கானுடன் ஆடினாலோ, நெதர்லாந்துடன் ஆடினாலோ, எதிரணியை ‘பொட்டலம் என்று கேலி பேசுகின்றனர். ஆனால் இதே அணிகள் பாகிஸ்தானுடனோ, ஆஸ்திரேலியாவுடனோ, தென் ஆப்பிரிக்காவுடனோ ஆடினால் பலவீனமான அணிகள் வெல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒரு வர்ணனைக்குழு ஒருதலைப்பட்சமாக வர்ணனை செய்யக் கூடாது, நடுநிலையுடன் வர்ணிக்க வேண்டுமென்பதே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா போட்டு சாத்தி எடுத்தது கூட இவர்களுக்கு கொஞ்சம் மனத்தாங்கல்தான். ஒரு வர்ணனைக்குழு இந்த அணி வெற்றி பெற வேண்டும் இந்த அணி தோல்வியுற வேண்டும் என்று வர்ணனையை வடிவமைத்துக் கொள்வது பொதுப்புத்தி தளத்தில் இயங்குவதாகும். இது ஒருவேளை தமிழ் வர்ணனைக்குரிய எதிர்மறை தனித்துவமோ என்னவோ! உலகில் வர்ணனைக்கு வரும் எவ்வளவு பெரிய வீரர்களும் தங்கள் நாட்டுக்காக எத்தனை போட்டிகளை சீரியசாக உணர்வுபூர்வமாக ஆடியிருந்தாலும் வர்ணனையென்று வரும்போது ஒரு விதமான புறவயத்தன்மையுடன் (objectivity) தன்னிலை எட்டிப்பார்க்காமல் வர்ணனை செய்வதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

விமர்சனம் வைப்பார்கள், இதை இப்படி செய்திருக்கலாம், அணியில் இந்த வீரர் தேவையில்லை, ஏன் இவரை எடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் வர்ணனை அறைக்கு வரும்போதே இன்று பாகிஸ்தான் தோற்றால் நன்றாக இருக்கும் என்று சாமானிய ரசிக மனோபாவங்களில் வர்ணனையாளர்கள் இருந்ததில்லை. தமிழ் வர்ணனை ஒரு பொதுப்புத்தித் தள மொழியில் பேசுகிறது. அதாவது highly opinionated என்று சொல்வார்கள். வெறும் தங்கள் அபிப்ராயங்களை உதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் விருப்பங்களை வர்ணனையாகச் சொல்பவர்களாக இருக்கிறார்கள்.

வர்ணனை என்பது இப்படி இருக்கக் கூடாது என்று பலரும் உணர்கின்றனர். மேலும் அவர்களுக்கே தெரிந்த பரிபாஷையிலும் (உ-ம்: மூக்குக்கு மேலே ராஜா) பேசுகின்றனர். டெக்னிக்கலாக ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்து வருபவர்களுக்கு தமிழ் வர்ணனை பெருத்த ஏமாற்றத்தையே அளிப்பதாக உண்மையான கிரிக்கெட் பற்றாள/ரசிகர்கள் கூறுகின்றனர்.

வீரர்கள் வர்ணனையாளர்களாக வருவதற்கு முன்பு ஆங்கிலத்தில் வர்ணனை செய்தவர்களான டாக்டர் நரோத்தம்புரி, ஆனந்த் செட்டில்வார்ட், டிக்கி ரத்னாகர், சுரேஷ் சுரய்யா, ராமமூர்த்தி (இவர் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் வர்ணனை சொல்வார்) உள்ளிட்டவர்களும் ஹிந்தியில் படு வேகமாகச் சொல்லும் சுஷில் தோஷி மற்றும் இதற்கு முன்பாக வானொலியில் தமிழ் வர்ணனை செய்தவர்களில் அப்துல் ஜப்பார், கூத்தபிரான், ராமமூர்த்தி உள்ளிட்டோர் அழகிய தமிழில் அற்புதமான வரணனையை மேற்கொண்டவர்கள். இவர்களிடம் தற்போது காணப்படும் பொதுப்புத்தி தனமும், கொச்சைகளும் இருக்காது. அந்தந்த வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையையும் மதிப்பையும் அளித்துப் பேசுபவர்கள்.

ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு வந்த பிறகே ரிச்சி பெனோ டோனி கிரேக், இயன் சாப்பல், பில் லாரி ஆகியோர்களது அட்டகாசமான வர்ணனைகளைக் கேட்ட பிறகு, மார்க் டெய்லர், இயன் ஹீலி, ஷேன் வார்ன், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங் போன்றோரும் அருமையாக கிரிக்கெட் நுணுக்கங்களை பார்வையாளர்களுக்குக் கடத்தினர். இந்தப் பின்னணியில் இன்றைய கொச்சைகளை எப்படி மதிப்பிடுவது?

இங்கிலாந்தில் கிறிஸ்டோபர் மார்டின் ஜென்கின்ஸ், ஆண்டி லாய்ட், ஜெஃப்ரி பாய்காட், பாப் வில்லிஸ், மைக் ஆத்தர்டன், டேவிட் கோவர், நாசர் ஹுசைன் போன்றோரும் தன்னிலை நீக்கிய வர்ணனையில் சிறந்தவர்களே. இப்போதைய ஆங்கில வர்ணனைகளும் முந்தைய தலைமுறை ஆங்கில வர்ணனை போல் இல்லை. ஆனால் தமிழ் வர்ணனை அளவுக்கு இறங்கிவிடவில்லை என்று கூறலாம்.

இப்போது ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் கொச்சை மீம் கலாச்சாரம், ட்ரோல் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக தமிழ் வர்ணனை உள்ளது. கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்க வேண்டும், நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கு இப்போதைய தமிழ் வர்ணனை ஏமாற்றத்தையேஅளிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்