சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபிக் (9), இமாம் உல் ஹக் (12) ஆகியோர் மார்கோ யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு பாபர் அஸமுடன் இணைந்த மொகமது ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.
» கணை ஏவு காலம் 17 | பக்கத்து வீட்டுப் புரட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
» “6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும்” - பிரதமர் மோடி @ இந்திய மொபைல் மாநாடு
48 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை ஜெரால்டு கோட்ஸி பிரித்தார். ரிஸ்வான் 27 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தனது 31-வது அரை சதத்தை கடந்த பாபர் அஸம் 65 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் தப்ரைஸ் ஷம்சி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷதப் கான், சவுத் ஷகீலுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.
ஷதப் கான் 36 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஜெரால்டு கோட்ஸி பந்தில் ஷார்ட் மிட்விக்கெட் திசையில் கேசவ் மகாராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது 3-வது அரை சதத்தை கடந்த சவுத் ஷகீல் 52 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் தப்ரைஸ் ஷம்சி பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 240 ஆக இருந்தது. இதன் பின்னர் எஞ்சிய 3 விக்கெட்களையும் பாகிஸ்தான் அணி விரைவாக இழந்தது. ஷாகீன் ஷா அப்ரிடி 2, மொகமது நவாஷ் 24, மொகமது வாசிம் 7 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 4, மார்கோ யான்சன் 3, ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
271 ரன்கள் இலக்குடன் பேட் செய்ததென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 33 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. குயிண்டன் டி காக் 24, கேப்டன் தெம்பா பவுமா 28, ராஸி வான் டெர்டஸ்ஸன் 21, ஹெய்ன்ரிச் கிளாசன் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 34வது ஓவரை வீசிய ஷாகீன் ஷா அப்ரிடி அதிரடி வீரரான டேவிட் மில்லரை ஆட்டமிழக்கக் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். டேவிட் மில்லர் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்தார்.
அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16.5 ஓவர்களில் 65 ரன்கள் தேவையாக இருந்தன. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ யான்சன் 20 ரன்களில் ஹரிஸ் ரவூஃப் பந்தில் ஆட்டமிழந்தார். சீராக ரன்கள் சேர்த்து வந்த எய்டன் மார்க்ரம் 93 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் உசாமா மிர் பந்தில் பாபர் அஸமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி அதிர்ச்சியில் உறைந்தது.
54 பந்துகளில் வெற்றிக்கு 21 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ஜெரால்டு கோட்ஸி 10 ரன்களில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில், ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. எனினும் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. இந்த ஜோடி போராடி மேற்கொண்டு 10 ரன்கள் சேர்த்தது.
லுங்கி நிகிடி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹரிஸ் ரவூஃப் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்ச்சை பாய்ந்து விழுந்தபடி ஒற்றைக் கையால் மடக்கியிருந்தார் ரவூஃப். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இதையடுத்து களமிறங்கிய தப்ரைஸ் ஷம்சி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஹரிஸ் ரவூஃப் பந்தை கால்காப்பில் வாங்கினார். களநடுவர் அவுட் கொடுக்காத நிலையில் பாகிஸ்தான் அணி மேல்முறையீடு செய்தது. ஆனால் அதற்கு பலன் இல்லாமல் போனது.
24 பந்துகளில் 8 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மொகமது வாசிம் வீசிய 47-வது ஓவரில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டன. மொகமது நவாஷ் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தில் ஷம்சி ஒரு ரன் சேர்க்க அடுத்த பந்தை கேசவ் மகாராஜ் பவுண்டரிக்கு விரட்ட தென் ஆப்பிரிக்க அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேசவ் மகாராஜ் 21 பந்துகளில் 7 ரன்களும், தப்ரைஸ் ஷம்சி 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. உலகக் கோப்பை தொடரில் 24 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் அணியை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. கடைசியாக 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
தற்போதைய வெற்றியின் மூலம் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தென் ஆப்பிரிக்க அணி பலப்படுத்திக் கொண்டுள்ளது. அதேவேளையில் 6 ஆட்டங்களில் 4 தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது.
29,980: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண சேப்பாக்கம் மைதானத்துக்கு நேற்று 29,980 ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
ஷதப் கான் காயம்: பாகிஸ்தான் அணியின் பீல்டிங்கின் போது முதல் ஓவரிலேயே தென் ஆப்பிரிக்க வீரரை ரன் அவுட் செய்யும் முயற்சியில் ஷதப் கான் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மூளை அதிர்ச்சி சோதனை நடத்தப்பட்டு களத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னர் ஐசிசி விதிகளின்படி அவருக்கு மாற்று வீரராக உசாமா மிர் சேர்க்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago