ODI WC 2023 | இறுதி வரை சமர் செய்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா வெற்றி!

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. 1 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வெற்றிக்காக இறுதி வரை பாகிஸ்தான் சமர் செய்தது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சவுத் ஷகில் 52 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அஸம் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான் 31 ரன்கள், முகமது நவாஸ் 24 ரன்கள் மற்றும் இஃப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி, 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. வான்டர் டுசன் மற்றும் மார்க்ரம் இணைந்து 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மில்லர் மற்றும் மார்க்ரம் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்களை இழந்தது. மார்க்ரம், 93 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். மில்லர் 29 ரன்கள், பவுமா 28 ரன்கள், டிகாக் 24 ரன்கள், வான்டர் டுசன் 21 ரன்கள் மற்றும் யான்சன் 20 ரன்கள் எடுத்தனர்.

சேஸிங்கில் தடுமாற்றம்: தென் ஆப்பிரிக்க அணி இலக்கை சுலபமாக விரட்டி, வெற்றி பெறும் என்ற சூழல் தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பவுலர்கள் அதனை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை. 40.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்திருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் மேலும் 21. அந்த ரன்களை எடுக்க சுமார் 7 ஓவர்கள் எடுத்துக் கொண்டது தென் ஆப்பிரிக்கா. 47.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

நம்பிக்கையை தகர்த்த நடுவரின் முடிவு: ஹாரிஸ் ரவுஃப் வீசிய 46-வது ஓவரின் கடைசி பந்தை ஷம்சி மிஸ் செய்தார். அது அவரது கால்களில் பட்டது. பாகிஸ்தான வீரர்கள் எல்பிடபிள்யூ என முறையிட்டனர். கள நடுவர் நாட்-அவுட் கொடுக்க ரிவ்யூ எடுத்தது பாகிஸ்தான். அதில் பந்து லெக் ஸ்டம்பை தகர்த்தது. இருந்தும் விக்கெட் அம்பையர்ஸ் கால் என தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE