தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற அந்தஅணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடமும் வீழ்ந்தது.

இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் செயல் திறன் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் இருந்து மட்டை வீச்சில் எந்த ஒருகட்டத்திலும் தாக்குதல் ஆட்டம் வெளிப்படவில்லை. பாபர் அஸம் 92 பந்துகளை சந்தித்துதான் 74 ரன்களை சேர்த்திருந்தார். அதேபோன்று அப்துல்லா ஷபிக் 75 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் 60 ரன்களை தாண்டவில்லை.

இறுதிக்கட்ட ஓவர்களில் ஷதப் கான்,இப்திகார் அகமது விரைவாக ரன்கள் சேர்த்ததாலே அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியால் 283 ரன்களை இலக்காககொடுக்க முடிந்திருந்தது. பேட்டிங்கில் ஒரு குழுவாக இணைந்து உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியபாகிஸ்தான் அணி, பந்து வீச்சிலும் அழுத்தம் கொடுக்கத் தவறியது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு கட்டத்திலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் இருந்து அச்சுறுத்தல் எழவில்லை.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கக்கூடிய நிலையில் ஷதப் கான், உசாமா மிர், இப்திகார் அமகது ஆகியோர் கூட்டாக 21 ஓவர்களை வீசி 131 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில்ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சு நிலைமை அதை விட பரிதாபமாக உள்ளது. ஷாகீன் ஷா அப்ரிடியிடம் இருந்து நிலையான செயல் வெளிப்படாமல் உள்ளது. ஹரிஸ் ரவூஃப்பும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஹசன் அலி அதிகரன்களை தாரை வார்ப்பவராக உள்ளார்.

வழக்கமாக 1980, 1990 காலக்கட்டத்தில் விளையாடிய பாகிஸ்தான் அணியிடம் கடுமையான போராட்ட குணம், துணிச்சல் இருக்கும். இதனாலேயே அந்த காலக்கட்டங்களில் கணிக்க முடியாத அணி என்று கூட பெயரெடுத்தது. ஆனால்தற்போதைய உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இருந்துஎந்த ஒரு கட்டத்திலும் போராட்ட குணம் வெளிப்படவில்லை. இதுவே கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இப்படியொரு சூழ்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இருந்து எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி. இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக மொகமது நவாஷ், முகமது வாசிம் ஜூனியர், ஸமான் கான் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

தென் ஆப்பிரிக்க அணியானது நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரன் வேட்டையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் அதிரடி வெற்றிகளை குவித்த அந்த அணி 3-வது ஆட்டத்தில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஆனால் அதன் பின்னர்மீண்டு வந்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கடைசியாக வங்கதேச அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது.

155 பவுண்டரிகள், 59 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளனர்.3 சதங்கள் உட்பட 407 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் குயிண்டன் டி காக், தலா ஒரு சதம், அரை சதத்துடன் 288 ரன்கள் சேர்த்துள்ள ஹெய்ன்ரிச் கிளாசன், ஒரு சதம், 2 அரை சதம் என 265 ரன்கள் சேர்த்துள்ள எய்டன் மார்க்ரம் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

இவர்களுடன் ராஸி வான் டெர் டஸ்ஸன், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் ஆகியோரும் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை வழங்கி வருவது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. பந்து வீச்சில் காகிசோ ரபாடா, மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி, லுங்கி நிகிடி ஆகியோர் சீரான செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் இதுவரை 7 விக்கெட்களையே வீழ்த்திஉள்ளார். எனினும் அவர், நடு ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ளார்.இன்றைய ஆட்டத்திலும் அவர், அதை தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதனால் தப்ரைஸ் ஷம்சிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

அரை இறுதி கனவு சாத்தியமா? தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துவிடும். அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அடுத்து நடைபெறும் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்த வேண்டும். இது நிகழ்ந்தாலும் அதிகபட்சம் பாகிஸ்தான் அணியால் 12 புள்ளிகளையே எட்ட முடியும். பாகிஸ்தான் அணியானது இன்றைய ஆட்டத்தை தவிர்த்து தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் வங்கதேசம், நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அரை இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். ஏற்கெனவே இந்தியா (10 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா (8 புள்ளிகள்), நியூஸிலாந்து (8 புள்ளிகள்) ஆகிய 3 அணிகளும் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த அணிகளுக்கு இன்னும் தலா 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இவர்களுடன் 4-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா மல்லுக்கட்டி வருகிறது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது ஆஸ்திரேலிய அணியின் வெற்றி தோல்விகளை சார்ந்தே அமையக்கூடும் என கருதப்படுகிறது.

பறிபோகுமா கேப்டன் பதவி? உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் அந்த அணியின் கேப்டன் பாபர் அஸமுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் முடிவு பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையாவிட்டால் பாபர் அஸம் கேப்டன் பதவியை இழக்க நேரிடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்